மகளிர் பிரிமியர் லீக் பைனல் மும்பைக்கு 132 ரன் இலக்கு

மும்பை: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான மகளிர் பிரிமியர் லீக் பைனலில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 132 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பிராபோர்ன் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. இஸ்ஸி வோங் வேகத்தில் ஷபாலி வர்மா 11, ஆலிஸ் கேப்ஸி 0, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9 ரன்னில் அடுத்தடுத்து வெளியேற, டெல்லி 35 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. ஓரளவு தாக்குப்பிடித்த மரிஸேன் கப் 18, கேப்டன் மெக் லான்னிங் 35 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

ஜெஸ் ஜோனசன் 2, அருந்ததி ரெட்டி 0, மின்னு மணி 1, தானியா பாட்டியா (0) அணிவகுப்பு நடத்த, டெல்லி 16 ஓவரில் 79 ரன்னுக்கு 9 விக்கெட் இழந்து பரிதவித்தது. இந்த நிலையில், ஷிகா பாண்டே - ராதா யாதவ் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்து கவுரவமான ஸ்கோரை எட்ட உதவியது. டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன் எடுத்தது. ஷிகா, ராதா இருவரும் தலா 27 ரன்னுடன் ஆட்டமிழக்கால் இருந்தனர்.  மும்பை பந்துவீச்சில் இஸ்ஸி வோங் 3, ஹேலி மேத்யூஸ் 3 (4 ஓவர், 2 மெய்டன், 5 ரன், 3 விக்கெட்), அமெலியா கெர் 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 132 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே எளிய இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது.

Related Stories: