மயாமி ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் போதபோவா: கோகோ, அசரெங்கா வெளியேற்றம்

மயாமி: அமெரிக்காவில் நடக்கும் மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, ரஷ்ய வீராங்கனை அனஸ்டேசியா போதபோவா தகுதி பெற்றார். 3வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காஃபுடன் (19 வயது, 6வது ரேங்க்) மோதிய போதபோவா (21 வயது, 26வது ரேங்க்), டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்து முதல் செட்டில் 6-7 (8-10) என்ற கணக்கில் தோற்று பின்தங்கினார். 2வது செட்டில் கடுமையாகப் போராடிய அவர் 7-5 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.  அதே வேகத்துடன் 3வது செட்டில் கோகோவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து புள்ளிகளைக் குவித்த போதபோவா 6-7 (8-10), 7-5, 6-2 என்ற செட் கணக்கில் போராடி வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 32 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு 3வது சுற்றில் பெலாரஸ் நட்சத்திரம் விக்டோரியா அசரெங்கா (33 வயது, 16வது ரேங்க்) 6-7 (3-7), 6-2, 4-6 என்ற செட் கணக்கில் 2 மணி, 27 நிமிடம் போராடி மாக்தா லினெட்டிடம் (போலந்து) தோல்வியை தழுவினார். முன்னணி வீராங்கனைகள் ஹடாட் மாயா (பிரேசில்), லியுட்மிலா சாம்சனோவா (ரஷ்யா), பவுலா படோசா (ஸ்பெயின்), பெத்ரா மார்டிச் (குரோஷியா) ஆகியோரும் 3வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தனர். எலனா ரைபாகினா (கஜகஸ்தான்), மார்டின டிரெ விசான் (இத்தாலி), எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்), ஜெஸிகா பெகுலா (அமெரிக்கா), கின்வென் ஸெங் (சீனா), யெலனா ஓஸ்டபெங்கோ (லாத்வியா) ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Related Stories: