பாசெல்: சுவிஸ் ஓபன் சூப்பர் 300 பேட்மின்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி இணை சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் சீனாவின் ரென் ஜியாங் யு - டான் கியாங் ஜோடியுடன் மோதிய இந்திய இணை 21-19, 22-20 என்ற நேர் செட்களில் போராடி வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. விறுவிறுப்பான இப்போட்டி 54 நிமிடங்களுக்கு நீடித்தது. உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற சாத்விக் - சிராக் ஜோடி, உலக டூர் போட்டிகளில் பெற்ற 5வது சாம்பியன் பட்டம் இது. கடந்த ஆண்டு இந்தியா ஓபன், பிரெஞ்ச் ஓபனில் பட்டம் வென்ற இந்த ஜோடி, 2019 தாய்லாந்து ஓபன் மற்றும் 2018ல் ஐதராபாத் ஓபன் தொடர்களில் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டுள்ளது.