வரலாற்றில் முதன்முறையாக 18.36 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடக்கவில்லை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: ‘‘தமிழக வரலாற்றில் முதன்முறையாக 18.36 லட்சம் பேர் எழுதியிருந்த குரூப்-4 தேர்வில், எந்த முறைகேடும் நடக்கவில்லை’’ என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளில் (குரூப் 4 பதவி) அடங்கிய கிராம நிர்வாக அலுவலர் 425 பணியிடம், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 6 வகையான பதவிகளுக்கான குரூப்-4 பதவிகளில் காலியாக உள்ள 10,117 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 30ம் தேதி அறிவித்தது. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 28ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தேர்வு எழுத 22,02,942 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இவ்வளவு பேர், தேர்வுக்கு விண்ணப்பித்தது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுவே முதல் முறை. குரூப் 4 தேர்வுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி நடந்தது.

இத்தேர்வை 18 லட்சத்து 36 ஆயிரத்து 534 பேர் எழுதினர். தேர்வு முடிவு வெளியிடுவதில் பல்வேறு தாமதங்கள் ஏற்பட்டது. சுமார் 8 மாதம் கால தாமதத்திற்கு பிறகு தேர்வு முடிவை கடந்த 24ம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. அதில், தேர்வர்கள் அவரவர் பெற்ற மதிப்பெண் எவ்வளவு, ஒட்டு மொத்த தரவரிசையில் எந்த இடம், சமூகப் பிரிவில் தரவரிசையில் எந்த இடம் என்பது தொடர்பான விவரங்களை டி.என்.பி.எஸ்.சி., அனுப்பியிருந்தது. இந்நிலையில் குரூப்-4 பதவிகளில் வரும் தட்டச்சர் பிரிவில் காலியாக உள்ள 4,500  இடங்களுக்கு தேர்வு நடந்தது. அதில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் தரவரிசையில் பின்தங்கியிருப்பதாகவும், குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் தரவரிசையில் முன்னிலையில் இருப்பதாகவும் தேர்வு எழுதியவர்கள் குற்றச்சாட்டை தெரிவித்து இருந்தனர். சில தேர்வர்கள் தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை.

விடைத்தாளை திருத்திய ‘ஸ்கேனர்’ கருவி தவறாக மதிப்பெண்ணை கணக்கிட்டு வழங்கி இருக்கிறது என்றும் தேர்வு எழுதியவர்கள் கூறியிருந்தனர். இந்த குற்றச்சாட்டு தேர்வு எழுதியவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அதே நேரத்தில் ஒரே பயிற்சி மையத்தில் படித்த சுமார் 2 ஆயிரம் பேர் குரூப்-4 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பதாக தகவலும் தேர்வர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் சாதனையாக 18.36 லட்சம் பேர் எழுதிய குரூப்-4 தேர்வு முடிவில் பல்வேறு குற்றச்சாட்டு, சந்தேகங்களை தேர்வர்கள் தெரிவித்திருந்த நிலையில், இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தரப்பில் கேட்ட போது, அவர்கள் பதில் அளித்துள்ளனர்.

அதில், ‘தட்டச்சர் பிரிவில் ஒரு ‘லோயர்’ ஒரு ‘ஹையர்’ வைத்திருந்து அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், இரண்டுமே ‘ஹையர்’ வைத்து, குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை விட தரவரிசையில் பின்தங்கி தான் இருப்பார்கள். இது தான் தட்டச்சர் மதிப்பெண் முன்னுரிமை. மேலும் குரூப்-4 மதிப்பெண் கணக்கீட்டு பணிகள் மென்பொருள் மூலம் மேற்கொள்ளப்பட்டு, அதிகாரிகள் மூலமாக நேரடி சரிபார்ப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இதில் எந்தவிதமான தவறும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அதிக காலம் எடுத்துக்கொண்டு சரியான முறையில் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த விவகாரத்தில் தவறு நடந்திருக்க வாய்ப்பே இல்லை.

இதில் ஏதேனும் குளறுபடிகளோ அல்லது தவறோ நடந்து இருப்பதாக தேர்வர்கள் கருதினால் உரிய ஆதாரங்களோடு grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாக புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு விளக்கம் கூறப்பட்டுள்ளது. இதேபோல், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நில அளவையர் மற்றும் வரைவாளர் பதவிகளில் உள்ள 1,089 காலி இடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் 6ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கான ரிசல்ட் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த தேர்வு மையத்தில் இருந்து மட்டும் அதிகமான தேர்வர்கள் தேர்வாகி உள்ளனர். ஒரே மையத்தில் இவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றது தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே மையத்தில் இருந்து மட்டும் அதிக அளவில் தேர்வாகியுள்ளதால், முறைகேடு நடந்துள்ளதா என விரிவான விசாரணை நடத்த வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு இதேபோல் குரூப் 4 தேர்வில் கீழக்கரை, ராமநாதபுரம் தேர்வு மையங்களில் நடந்த தேர்வு முறைகேடு விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில் தற்போது இந்த சம்பவமும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுதொடர்பாகவும் டிஎன்பிஎஸ்சி விசாரித்து உண்மை நிலவரத்தை தெரிவிக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: