ஊட்டியில் கொட்டும் மழையிலும் தாவரவியல் பூங்கா ஊழியர்கள் 3வது நாளாக போராட்டம்

ஊட்டி: கொட்டும் மழையிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் பூங்கா மற்றும் பண்ணை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் 800க்கும் மேற்பட்ட பண்ணை மற்றும் பூங்கா ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 300 பேர் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 500 பேர் தற்காலிக பணியாளர்களாகவே உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த போதிலும், இவர்கள் இதுவரை பணிநிரந்தரம் செய்யப்படவில்லை. மேலும், நிரந்தர பணியாளர்களுக்கும் இதுவரையில் தோட்டக்கலைத்துறை சார்பில் காலமுறை ஊதியம் வழங்கப்படவில்லை.

 

மேலும், ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வு போன்றவை வழங்கப்படாமல் உள்ளது. இதனால், தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால், அரசு இவர்களது கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் உள்ளது. இந்நிலையில், தோட்டக்கலைத்துறையில் பணியாற்றி வரும் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும். பண்ணை பணியாளர்களுக்கு ஓய்வூதியம், தொகுப்பு நிதி, பணிக்கொடை வழங்க வேண்டும். தோட்டக்கலைத்துறையில் பணியாற்றும் பண்ணை பணியாளர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய சந்தா தொகை பிடித்தம் செய்திட வேண்டும்.

பணி மூப்பு அடிப்படையில் பத்தாண்டு பணிக்காலம் முடிந்தவர்களுக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் காலியாக உள்ள மஸ்தூர் மற்றும் அடிப்படை பணிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். தோட்டக் கலைத்துறையில் தினக்கூலி பணியாளர்களாக பணியாற்றும் பண்ணை மற்றும் பூங்கா பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கிய குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி தாவரவியல் பூங்கா பண்ணை மற்றும் பூங்கா பணியாளர்கள் போராட்டத்தை துவக்கியுள்ளனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 23ம் தேதி முதல் தொழிலாளர்கள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது நாளாக நேற்றும் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி வந்தனர். அப்போது மழை குறுக்கிட்டது. எனினும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்றாவது நாளாக பூங்கா ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போதிலும் தோட்டக்கலைத்துறை உயர் அதிகாரிகளோ அல்லது மாவட்ட நிர்வாகமோ பேச்சு வார்த்தை எதுவும் நடத்தவில்லை. தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் மலர் கண்காட்சி உட்பட அனைத்து பணிகளும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

Related Stories: