விருதுநகரில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்

சேலம்: தமிழ்நாட்டில் விருதுநகரில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்படுகிறது என்று ஒன்றிய ஜவுளித்துறை மற்றும் ரயில்வே இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். சேலத்தில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் தொடக்க விழா நேற்று தனியார் ஓட்டலில் நடந்தது. இதில் பங்கேற்ற ஒன்றிய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனாபென் ஜர்தோஷ் கூறியதாவது:  நாடு முழுவதும் 7 இடங்களில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்கள் தொடங்கிடும் வகையில், நாட்டிலேயே  முதலாவதாக விருதுநகரில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா தொடங்கப்படுகிறது.

இதில், 50 சதவீத நிதி ஒன்றிய அரசு சார்பில் அளிக்கப்படும். எந்தவித சுற்றுச் சூழல் பிரச்னைக்கும் இடம் இல்லாத வகையில் இந்த ஒருங்கிணைந்த பூங்கா அமைய உள்ளது. நீர்மறுசுழற்சி, ஆயத்த ஆடைப்பூங்கா, நெசவாளர்களுக்கான பொது சேவை மையம்  உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் ஜவுளிப்பூங்கா அமைகிறது. இதன் மூலம் இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும். நாடு முழுவதும் 75 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படவுள்ளன. சேலம் ரயில் நிலையமும் மேம்படுத்தப்படும். நாடு முழுவதும் சுற்றுலா தளங்கள், ஆன்மிக நகரங்களை இணைக்கும் வகையில் பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: