குல் காந்திக்கு சிறை தண்டனை செங்குன்றத்தில் காங்கிரசார் சாலை மறியல்

புழல்: செங்குன்றத்தில், ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்ததை கண்டித்து, காங்கிரஸார் நேற்றுமுன்தினம் மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், சூரத் நீதிமன்றம் எம்பி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, செங்குன்றம் பேருந்து நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் செங்குன்றம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோபி தலைமையில் கோஷங்களை எழுப்பி நேற்றுமுன்தினம் மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செங்குன்றம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ராகுல் காந்தி மீது வழக்கு தொடுத்த பாஜவை கண்டித்தும், நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும், முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையாக சிறை தண்டனை அளிக்கப்பட்டதாக கூறி, முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் லயன் டி.ரமேஷ் கண்டன உரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் வழக்கறிஞர் அருணாச்சலம், சாந்தகுமார், அலிம் அல்புகாரி, புழல் குபேந்திரன், சென்னை மாநகராட்சி கவுன்சிலர் சங்கீதாபாபு உள்ளிட்ட மகளிர் அணியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனா‌ல், செங்குன்றம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதம் நடக்காமல் இருக்க செங்குன்றம் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Related Stories: