ராகுலின் தகுதிநீக்கம் ஜனநாயகத்துக்கு விரோதமானது; எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் பாஜக: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்..!

டெல்லி: பிரதமரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டது. மார்ச் 23-ம் தேதி முதல் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலர் உத்பால் குமார் சிங் அறிவித்துள்ளார். தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட நிபுணர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மல்லிகார்ஜூன கார்கே:

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில்; ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததற்காக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோருவோம். ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்ய எல்லா வழிகளிலும் பாஜக முயன்றது. தேவைப்பட்டால் ஜன நாயகத்தை காக்க சிறைக்கும் செல்வோம். உண்மையை பேசியதற்காக பழிவாங்கப்படுகிறார் ராகுல் காந்தி எனவும் குற்றம் சாட்டினார்.

திருநாவுக்கரசர் எம்.பி.

ராகுலின் தகுதி நீக்கம் ஜனநாயகத்துக்கு விரோதமான செயலாகும்; ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதாகும் என திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தது திட்டமிட்டு செய்யப்பட்ட நடவடிக்கை எனவும் கூறினார்.

முன்னாள் ஒன்றிய அமைச்சர் நாராயணசாமி

ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது பா.ஜ.க.வின் திட்டமிட்ட செயலாகும் என முன்னாள் ஒன்றிய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் குரலை ஒடுக்கும் செயலில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது எனவும் கூறினார்.

திருமாவளவன் எம்.பி.

ராகுல்காந்தியின் தகுதிநீக்கம் திட்டமிட்ட அரசியல் சதி என திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் யதேச்சதிகார போக்கை காட்டுகிறது. ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து தேர்தலில் போட்டியிட விடாமல் செய்ய சதித்திட்டம் நடக்கிறது. ராகுல்காந்தி தகுதி நீக்கம் திட்டமிட்ட அரசியல் சதி; இதை வன்மையாக கண்டிக்கிறோம். 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றால் தகுதி நீக்கம் செய்யலாம் என்பதால் பழிவாங்கும் நடவடிக்கை எனவும் கூறினார்.

திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி

ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தது ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாகும் என திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். ராகுலின் ஒற்றுமை நடைபயணம் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஒன்றிய பாஜக அரசு உணர்ந்துள்ளது. ராகுல் காந்தியை 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்கவிடாமல் செய்துவிடலாம் என்று பாஜக திட்டமிட்டுகிறது. ராகுலை தகுதிநீக்கம் செய்ததன் மூலம் ஒன்றிய பாஜக அரசின் சர்வாதிகாரப் போக்கு வெளிப்படையாக தெரிகிறது. 2024 தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி.கனிமொழி

பாஜகவின் நடவடிக்கைகள் அனைத்தும் ஜனநாயக படுகொலை என திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். இவ்வளவு அவசரமாக இப்படியொரு தீர்ப்பு வரக்காரணம் என்ன?. வரும் காலங்களில் ராகுல் காந்தியை அரசியலில் இருந்து ஒடுக்கவே பாஜக அரசு இவ்வாறு செயல்பட்டுள்ளது எனவும் கூறினார்.

முத்தரசன்

ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தது கடும் கண்டனத்துக்குரியது என இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். ஒன்றிய பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்கு வேறு எந்தக் காரணமும் தேவையில்லை. வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கருத்துக் கூறினால், அவர்களின் பதவியை குறி வைத்து பாஜக அரசு நடவடிக்கை எடுப்பதாக முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கே.பாலகிருஷ்ணன்

ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததை பழிவாங்கும் நடவடிக்கையாகவே நான் பார்க்கிறேன் என ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜெய்ராம் ரமேஷ்

அதானியின் மெகா ஊழல் விவகாரத்தில் ராகுல் காந்தி உறுதியாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் நாங்கள் ஒருபோதும் அமைதியாக இருக்க மாட்டோம். எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க பாஜக மேற்கொண்ட முயற்சியே இது. ஜனநாயகத்தை பாதுகாக்க சிறைக்கு செல்லவும் காங்கிரஸ் கட்சியினர் தயாராக உள்ளனர் எனவும் கூறினார்.

துரைமுருகன்

பேசியதற்கே ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்திருக்கிறார்கள் என அவை முன்னவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜனநாயக முறைப்படி எதிர்க்கட்சியினரை பேச அனுமதிக்கிறோம். துரைமுருகன் எதிர்க்கட்சி உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசிக் கொண்டிருந்தபோது அவை முன்னவர் துரைமுருகன் பதிலளித்தார்.

மம்தா பானர்ஜி

ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியை கண்டுள்ளோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜகவின் பிரதான இலக்காக மாறியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: