சூர்ப்பனகையுடன் ஒப்பிட்டு பேசியதால் மோடிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்வேன்: காங்கிரஸ் மூத்த தலைவர் அதிரடி

புதுடெல்லி: சூர்ப்பனகையுடன் என்னை ஒப்பிட்டு பேசியதால் மோடிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்வேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி தெரிவித்தார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?’ என்று விமர்சித்தார். இதுதொடர்பாக குஜராத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது.

அதன்படி, இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் வர்மா, ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்தார். இதையடுத்து, ராகுல் காந்தி தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் வர்மா, அவருக்கு 30 நாள் ஜாமீன் வழங்கி, அதுவரை தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிட்டார். ராகுல்காந்திக்கு எதிராக நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளதால், தேசிய அளவில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி வெளியிட்ட வீடியோ (மோடி பேசியது) பதிவில், ‘கடந்த 2018ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில், பிரதமர் மோடி என்னை சூர்ப்பனகை (ராமாயண பெண் கதாபாத்திரம்) என்று வர்ணித்து பேசினார். அதனால் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப் போகிறேன். நீதிமன்றம் எவ்வளவு வேகமாக செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: