என்.எல்.சி நில இழப்பீடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்; முதலமைச்சர் தலையிட வலியுறுத்தல்

சென்னை: என்.எல்.சி நில இழப்பீடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

என்.எல்.சி. நிறுவனம் நிலம் எடுக்க அனுமதிக்க கூடாது: வேல்முருகன்

நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை என்.எல்.சி. நிறுவனம் நிலம் எடுக்க அனுமதிக்கக் கூடாது என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார். உரிய இழப்பீடு, மாற்று இடம் வழங்காததால் என்.எல்.சிக்கு நிலம் வழங்கியவர்கள் தவிக்கின்றனர். முதலமைச்சர் தலையிட்டு பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக அழைத்து பேசி உரிய தீர்வு காண வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்குகூட வேலை வழங்கவில்லை: ஜி.கே.மணி

என்.எல்.சி. நிறுவனத்தில் அண்மையில் நியமிக்கப்பட்ட 293 பேரில் ஒருவர் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். என்.எல்.சி. நிறுவனம் 25,000 ஏக்கர் நிலத்தை கையப்படுத்தி தனியாருக்கு கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என்றும் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

என்எல்சி தந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை: செல்வப்பெருந்தகை

கடந்த காலத்தில் அரசுக்கும், கடலூர் மக்களுக்கும் என்எல்சி கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். கடலூரில் 50 ஆண்டுக்கு முன் 10 அடியில் கிடைத்த நீர், தற்போது 1000 அடிக்கு கீழ் சென்றுவிட்டதாக அவர் தெரிவித்தார்.   

என்எல்சி விவகாரத்தில் முதல்வர் தலையிட வேண்டும்: நாகை மாலி

என்எல்சி நில இழப்பீடு விவகாரத்தில் முதலமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும் என மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. நாகை மாலி தெரிவித்துள்ளார்.

கருத்துக்கேட்பு கூட்டங்களில் விவசாயிகள் எதிர்ப்பு: அதிமுக

என்.எல்.சி. விவகாரத்தில் 3 முறை நடந்த கருத்துக்கேட்பு கூட்டங்களில் ஒரு விவசாயி கூட ஆதரவாக பேசவில்லை என அதிமுக தெரிவித்தது. என்.எல்.சி.க்கு நிலம் தந்தவர்கள் வாழ்வாதாரத்துக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர் என அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. கூறினார்.

Related Stories: