தேர்வு எழுதாத மாணவர்களின் விவரங்களை சேகரிக்க குழு அமைக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

சென்னை: பிளஸ் 2 தேர்வில் 50,000 மாணவர்கள் பங்கேற்காதது குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம் அளித்தார். அப்போது; இவ்வளவு மாணவர்கள் ஏன் பொதுத்தேர்வு எழுத வரவில்லை என முதலமைச்சர் தொலைபேசி மூலம் கேட்டார். கொரோனாவுக்கு முன்பு இருந்த பள்ளிக் கல்வித்துறை இப்போது எவ்வாறு செயல்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வது மட்டும் எனது வேலை இல்லை.

எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை வரக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. பிளஸ் 2 தேர்வு எழுதாத 47,943 பேரில் 40, 593 பேர் கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள். கொரோனா காலத்துக்கு பிறகு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தேர்வு எழுதாத மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து தொடர்ந்து பள்ளிக்கு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து, துணைத் தேர்வு எழுத நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆட்சியர்களின் ஒத்துழைப்பு, பிற துறைகளின் பங்களிப்புடன் மாணவர்களை துணைத்தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு எழுதாத மாணவர்களின் விவரங்களை சேகரிக்க பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் குழு அமைக்கப்படும். தேர்வு எழுதாத மாணவர்களுக்கு துணைத்தேர்வின் அவசியம் குறித்து விளக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் கூறினார்.

Related Stories: