புதுச்சேரிக்கு விரைவில் மாநில அந்தஸ்து கிடைக்கும்; தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி பெறுவோம்: முதல்வர் ரங்கசாமி உறுதி

புதுச்சேரி: புதுச்சேரிக்கு விரைவில் மாநில அந்தஸ்து கிடைக்கும்; தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி பெறுவோம் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இந்தாண்டிற்கான புதுச்சேரி பட்ஜெட்டை கடந்த மார்ச் 13ம் தேதி புதுவை முதல்வரும் நிதித்துறையைக் கைவசம் வைத்திருப்பவருமான ரங்கசாமி தாக்கல் செய்தார். அதில் கேஸ் சிலிண்டர் மானியம், பெண் குழந்தைகளுக்கு வைப்பு நிதி என்று பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. இப்போது புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதமும் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்களின் பதிலும் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரி சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் திமுக உறுப்பினர் அனிபால் கென்னடி கேள்விக்கு முதல்வர் ரங்கசாமி பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், புதுச்சேரிக்கு விரைவில் மாநில அந்தஸ்து கிடைக்கும்; தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி பெறுவோம். மாநில அரசு ஊழியர் தேர்வுக்கு மாநில தேர்வாணையம் அமைக்க ஒன்றிய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. புதுச்சேரியில் முதலீட்டாளர்கள் மாநாடு முதல் முறையாக மிகச் சிறப்பாக இவ்வாண்டு நடத்தப்படும். சேதராப்பட்டில் உள்ள 750 ஏக்கர் நிலத்தில் புதிய தொழிற்சாலைகளை கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறினார்.

Related Stories: