12 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது கண்டிக்கத்தக்கது: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

சென்னை: 12 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியங்களுக்கு ஒன்றிய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வைகோ கூறியுள்ளார்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். அவர்களது 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து முருகானந்தம் (37) என்பவருக்கு சொந்தமான டிஎன்08எம்எம் 1802 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் முருகானந்தம், விசாகலிங்கம் (28), நைல்ராஜ் (20), பாரதிதாசன் (27), சசிகுமார் (45), ரவி (25) மற்றும் கோட்டைப்பட்டினத்தில் இருந்து மாலதி என்பவருக்கு சொந்தமான டிஎன் 08 எம்எம் 0065 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் சிவக்குமார் (43), கலையரசன் (23), லோகேஸ்வரன் (24), சக்தி (25), பிரபு (35), சுந்தரமூர்த்தி (45) ஆகிய 12 மீனவர்கள் கடந்த 21ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இந்நிலையில் நெடுந்தீவு அருகே நடுக்கடலில் வலைகளை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 12 மீனவர்களையும் சிறைபிடித்து கைது செய்தனர்.

இதைதொடர்ந்து 2 விசைப்படகுகள், மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 12 மீனவர்களையும் விசைப்படகுகளுடன் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இதனால் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் மீனவ கிராமங்களில் பதற்றம், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கூறுகையில், இந்திய எல்லைக்குள் மீன் பிடித்தாலும் எல்லை தாண்டியதாக எங்களை இலங்கை கடற்படை கைது செய்கிறது. இந்த அட்டூழியம் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம் என தெரிவித்தனர்.

இந்நிலையில் 12 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியங்களுக்கு ஒன்றிய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வைகோ கூறியுள்ளார். 

Related Stories: