சில்லி பாயிண்ட்ஸ்

* அயர்லாந்து அணியுடன் நேற்று நடந்த 3வது ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற வங்கதேசம் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அயர்லாந்து 28.1 ஓவரில் 101 ரன்னுக்கு ஆல் அவுட் (லோர்கன் டக்கர் 28, கர்டிஸ் கேம்பர் 36 ரன்). வங்கதேச பந்துவீச்சில் ஹசன் மகமூத் 5, டஸ்கின் அகமது 3, எபாதத் உசேன் 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 13.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 102 ரன் எடுத்து வென்றது. கேப்டன் தமிம் இக்பால் 41 ரன், லிட்டன் தாஸ் 50 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகன்: ஹசன் மகமூத், தொடர் நாயகன்: முஷ்பிகுர் ரகிம்.

* போபாலில் நடக்கும் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியா நேற்று கலப்பு குழு போட்டியில் 1 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்களை வென்றது. வருண் தோமர் - ரிதம் சங்வான் ஜோடி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு பிரிவு பைனலில் சீனாவின் வெய் கியான் - ஜின்யவோ லியு ஜோடியிடம் தோற்று 2வது இடம் பிடித்தது. ஏர் ரைபிள் கலப்பு குழு பிரிவில் இந்தியாவின் ருத்ராங்க்‌ஷ் பட்டீல் - நர்மதா நிதின் ராஜு இணை 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றது.

* காயம் காரணமாக ஓய்வெடுத்து வரும் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடையில்லா சான்று வழங்காததால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட மற்றொரு இங்கிலாந்து வீரர் லயம் லிவிங்ஸ்டனுக்கு என்ஓசி வழங்கப்பட்டுள்ளதால், அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடுவது உறுதியாகி உள்ளது.

* சர்வதேச கால்பந்து வரலாற்றில் அதிகமான போட்டிகளில் களமிறங்கிய வீரர் என்ற சாதனையை படைக்க விரும்புவதாக போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறியுள்ளார்.

Related Stories: