குருவிமலை வெடிவிபத்து சம்பவம் மின்னல் வேகத்தில் நிவாரண தொகை வழங்கிய முதல்வர்: சட்டமன்றத்தில் நன்றி தெரிவித்த உத்திரமேரூர் எம்எல்ஏ

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையை அடுத்த குருவிமலையில் நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் மின்னல் வேகத்தில் நிவாரண தொகை அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கு உத்திரமேரூர் தொகுதி திமுக எம்எல்ஏ சுந்தர் சட்டமன்றத்தில் நன்றி தெரிவித்தார். நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் சுந்தர் எம்எல்ஏ பேசியதாவது:

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட உத்திரமேரூர் தொகுதி ஓரிக்கை 46வது வார்டில் துயர சம்பவம் நடைபெற்றது. அதனை கேள்விப்பட்டவுடன் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினோம்.

இந்த தகவல் அறிந்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என மின்னல் வேகத்தில் அறிவித்த முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பிரதமர் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண தொகையாக அறிவித்துள்ளார். அதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பட்டாசு தொழிற்சாலை 2024ம் ஆண்டு வரை உரிமம் இருந்தாலும் கோயில் திருவிழாக்களில் அதிக அளவில் சத்தம் கேட்க வேண்டும்.

அதிக அளவில் தொழிலாளர்களை வைத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த கொடூர வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே, இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வண்ணம் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதோடு, இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கின்ற வகையில் நம்முடைய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: