20 கி.மீ.தொலைவிற்கு ஒருமதுபான கடைதான் உள்ளது என கூற மதுபானம் அத்தியாவசிய பொருளா?.. ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: 20 கி.மீ.தொலைவிற்கு ஒருமதுபான கடைதான் உள்ளது என கூற மதுபானம் பொதுமக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பொருளா? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த ஞானதாஸ் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில் பி.வாகைக்குளம் கிராமத்தில் பட்டியலின மக்கள், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பி.வாகைக்குளம் கிராமத்தை சுற்றி 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வகுப்பினை சேர்ந்த மக்கள் வகித்து வருகின்றனர்.

இந்நிலையில், மேலையூர் கிராம நெடுஞ்சாலையில், செயல்பட்டு வந்த மதுபான கடை எண் 11/910 பி.வாகைகுளத்தில் மாற்றியமைக்கப்பட்டது. இதனால் அந்த கிராமத்தில் வெவ்வேறு சமூகத்தினைரிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த மதுபான கடை சிறுவர்கள் பெண்கள் சென்றுவர கூடிய பாதையில் அமைந்துள்ளது. எனவே அந்த கடையை அகற்ற வேண்டும் என அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சரமாரியாக கேள்வியெழுப்பினார். 20 கி.மீ.தொலைவிற்கு ஒருமதுபான கடைதான் உள்ளது என கூற மதுபானம் பொதுமக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பொருளா?. என கேள்வியெழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து உள்துறை, கலால் மற்றும் மதுவிலக்கு துறை கூடுதல் செயலர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர், விருதுநகர் டாஸ்மாக் மேலாளர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: