மசோதாவை அதிமுக சார்பில் வரவேற்பதாக கூறிய ஓபிஎஸ்க்கு ஈபிஎஸ் தரப்பு எதிர்ப்பு: பேரவைக்குள் மோதிக் கொண்ட அதிமுகவினர்.. சிரித்த ஓபிஎஸ்..!!

சென்னை: மசோதாவை அதிமுக சார்பில் வரவேற்பதாக ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீது ஓ.பன்னீர்செல்வம் உரையாற்ற சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்தார். அப்போது பேசிய அவர், மாண்புமிகு முதலமைச்சர் கொண்டு வந்த இந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அதிமுக சார்பாக முழுமையாக வரவேற்கிறோம் என தெரிவித்தார். அதிமுக என குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தை பேச அனுமதித்ததற்கு எடப்பாடி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் பேசிய பிறகு, ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுமதி அளித்தது ஏன்? ஒரு கட்சிக்கு ஒருவர் மட்டுமே பேச அனுமதி என கூறிவிட்டு பெரும்பான்மை இல்லாதவரை பேச அனுமதித்தது எப்படி? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை பொறுத்துதான் அவையில் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதற்கு விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு, ஓபிஎஸ்ஸை எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்றோ, அதிமுக உறுப்பினர் என்றோ கூறவில்லை.. உறுப்பினர் என்று தான் கூறினேன். முக்கிய மசோதா என்பதால் முன்னாள் முதல்வர் என்ற முறையில் பன்னீருக்கு வாய்ப்பு அளித்ததாக தெரிவித்தார். சட்டப்பேரவைக்குள் அதிமுகவினர் இரு அணிகளாக பிரிந்து காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கடும் அமளி ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசியபோது ஓபிஎஸ் சிரித்தார்.

Related Stories: