பணம் பெற்றுக் கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறும் நபர்களை நம்ப வேண்டாம்...தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தல்

சென்னை : வேலைதேடும் இளைஞர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார். தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு எச்சரிக்கை வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார் அந்த வீடியோவில் பேசிய அவர்; பட்டதாரிகள், வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி இது. ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, சிலர் பணமும் வாங்கிவிட்டு வேலைக்கான அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரையும் கொடுக்கிறார்கள். நீங்கள் அதனை பெற்றுக்கொண்டு வட இந்தியாவில் உள்ள  குறிப்பிட்ட ரயில்வே நிலையத்தில் வேலைக்கு சேர முயற்சிக்கும் போது,  இது ஒரு போலி நியமன ஆணை என்று கூறி அங்கு உங்களை கைது செய்துவிடுவார்கள்.

சமீபத்தில் இப்படி நடந்தபோது நாங்கள் தலையிட்டு உண்மையான குற்றவாளியை ஒப்படைத்து அந்த நபரை மீட்டு கொண்டுவந்தோம். இது போல நிறைய பேர் ரயில்வே துறையில் பணம் கொடுத்து போலி நியமன ஆணைகளை வாங்கி ஏமாந்துள்ளனர். ரயில்வே மட்டும் அல்ல, மத்திய, மாநில அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி வேலையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். எந்த அரசு பணிக்கும் அதற்கென ஒரு தேர்வு நடத்தப்பட்டு அதன்மூலமாகவே பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எந்த அரசு துறையிளையும் இன்றைக்கு பணம் மூலம் ஆட்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறை இல்லை. ஆகவே, யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: