போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடி சார்பதிவாளர், எழுத்தர் உட்பட 8 பேர் மீது போலீஸ் வழக்கு

புதுச்சேரி: போலி ஆவணங்களை தயாரித்து  கடலூர் தம்பதியின் நிலத்தை மோசடி செய்ததாக சார்பதிவாளர், எழுத்தர் மற்றும் 6  பேர் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர். கடலூர் முதுநகரை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி கல்யாணி (52). இவர் கடந்த 1997ல் புதுச்சேரி, கருவடிக்குப்பம் பகுதியில் 2400  சதுரஅடி நிலத்தை குளிர்ந்தவள்ளி என்பவரின் பவர் ஏஜென்ட் தேவகியிடம் வாங்கி உள்ளார். இதன் மீது வங்கியில் கடன் பெற கடந்தாண்டு  நவம்பரில் உழவர்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து வில்லங்க சான்றிதழ்  பெற்றுள்ளார். அதில் புதுச்சேரி, வில்லியனூர் கொம்யூன், சேதராப்பட்டு ராஜ்குமார் மனைவி சசிகலாவுக்கு 2012 ஏப்ரல் மாதம் கல்யாணியும், அவரது  கணவர் வேலுவிடம் இருந்து கிரயம்  பெற்றதாகவும், சொத்தின் மற்றொரு பகுதியை சரோஜா தேவி என்பவர் 2012 மே மாதம் கிரயம் பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

வேலு, கல்யாணி தம்பதியின் புகைப்படத்திற்கு பதிலாக வேறு 2 நபர்களின் புகைப்படத்தை ஒட்டியும், போலி ஆவணங்களை சமர்ப்பித்ததும் தெரியவந்தது. சாட்சிகளாக லாஸ்பேட்டை சித்தார்த்தன், மாட்டுக்காரன் சாவடி ஆறுமுகம்  உள்ளிட்டோர் கையெழுத்திட்டு இருப்பதும் கண்டறியப்பட்டது. இதற்கான போலி  பத்திரத்தை ராஜேந்திரன் என்பவர் தயாரித்து கொடுத்த நிலையில், உழவர்கரை சார்பதிவாளர் பதிவு செய்திருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசில்  கல்யாணி புகார் அளித்தார். அதன்படி, உழவர்கரை சார்பதிவாளர், எழுத்தர் உள்பட 8 பேர் மீது போலி ஆவணங்கள் தயாரித்தல், மோசடியில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் போலீசார் நேற்று வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: