21 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

சென்னை: இந்திய அணியுடனான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 21 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. அந்த அணியில் எல்லிஸ், கிரீனுக்கு பதிலாக ஏகார், வார்னர் சேர்க்கப்பட்டனர். இந்திய அணி மாற்றம் ஏதுமின்றி களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் இருவரும் ஆஸி. இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 68 ரன் சேர்த்தது.

ஹெட் 33 ரன் (31 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் ஸ்மித் 0, மிட்செல் மார்ஷ் 47 ரன் (47 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் அடுத்தடுத்து வெளியேற ஆஸி. 85 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. அடுத்து வந்த வார்னர் 23, லாபுஷேன் 28, ஸ்டாய்னிஸ் 25, அபாட் 26 ரன் எடுத்து குல்தீப் - அக்சர் சுழல் கூட்டணியிடம் சரணடைந்தனர். ஏகார் (17), ஸ்டார்க் (10) இருவரையும் சிராஜ் வெளியேற்ற, ஆஸி. 49 ஓவரில் 269 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ஸம்பா 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய பந்துவீச்சில் ஹர்திக், குல்தீப் தலா 3, அக்சர், சிராஜ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து 50 ஓவரில் 270 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் - கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 65 ரன் சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தது. ரோகித் 30 ரன் (17 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), கில் 37 ரன் (49 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தனர். கோஹ்லி - ராகுல் ஜோடி உறுதியுடன் விளையாடி 69 ரன் சேர்த்தது. ராகுல் 32 ரன் எடுத்து ஆட்டமிழக்க, அக்சர் 2 ரன்னில் ரன் அவுட்டானது பின்னடைவை கொடுத்தது.

ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த கோஹ்லி 54 ரன் (72 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த சூரியகுமார் வழக்கம்போல சந்தித்த முதல் பந்திலேயே ‘கோல்டன் டக் அவுட்டாகி’ ஏமாற்றமளித்தார். நடப்பு தொடரின் 3 இன்னிங்சிலுமே அவர் இப்படி ஆட்டமிழந்தது மோசமான ‘ஹாட்ரிக்’ ஆக அமைந்தது. ஓரளவு தாக்குப்பிடித்த ஹர்திக் 40 ரன் (40 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), ஜடேஜா 18 ரன் (33 பந்து, 1 பவுண்டரி) எடுத்து ஆடம் ஸம்பா சுழலில் பலியாகினர். ஷமி 14 ரன், குல்தீப் 6 ரன்னில் (ரன் அவுட்) ஆட்டமிழக்க, இந்தியா 49.1 ஓவரில் 248 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. ஆஸி. பந்துவீச்சில் ஸம்பா 4, ஏகார் 2, அபாட், ஸ்டாய்னிஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 21 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

Related Stories: