தனிக்கட்சியை நடத்தி வருகிறார் ஓபிஎஸ்; ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலாவதியாகவில்லை; ரத்து செய்யப்பட்டது: எடப்பாடி தரப்பு வாதம்..!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 4 வழக்குகளும் பொறுப்பு தலைமை நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜபாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. ஓ.பி.எஸ்., மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதங்களை முன்வைத்து வருகிறார்.

அப்போது; எங்களை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்திருக்கிறார் பன்னீர்செல்வம். நாங்கள்தான் அதிமுக என சில நபர்கள் கூறுவது புதிதல்ல. பன்னீர்செல்வத்தின் சகோதரரே விளக்கம் கேட்கப்படாமல் நீக்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமிதான் இடைக்கால பொதுச்செயலாளர் என்பது உலகத்துக்கே தெரியும். பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தனக்கு என பன்னீர்செல்வம் தனிக்கட்சி நடத்தி வருகிறார். தாங்கள்தான் உண்மையான அதிமுக என்றால் தேர்தல் ஆணையத்தில் மக்கள் மன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.

கட்சி கட்டமைப்பின் முக்கிய அம்சமே பொதுக்குழு அதிகாரமிக்கது என்பது தான். கட்சி நடவடிக்கைகளில் முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்தது பொதுக்குழு தான். பொதுக்குழு முடிவுகளே இறுதியானது. இந்த முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே கட்சியில் நீடிக்க முடியும். ஜூன் 23ல் கட்சி அலுவலகத்தை சூறையாடியதே ஜூலை 11 பொதுக்குழுவில் ஓபிஎஸ் தரப்பை நீக்க காரணம். கட்சிக்கும், அதன் தலைவர்களின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்ததால் நீக்கப்பட்டுள்ளனர்.

வலிமையான ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற அடிப்படை உறுப்பினர்கள், பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கைக்கு ஏற்பவே ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டன. ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலாவதியாகவில்லை; ரத்து செய்யப்பட்டது. தெளிவான, வலுவான ஒற்றைத் தலைமை வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று வாதிட்டார்.

Related Stories: