கட்சியிலிருந்து நீக்கும் முன் உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை: ஜே.சி.டி.பிரபாகர் தரப்பு வாதம்..!

சென்னை: கட்சியிலிருந்து நீக்கும் முன் உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என ஜே.சி.டி.பிரபாகர் தரப்பில் வாதிடப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 4 வழக்குகளும் பொறுப்பு தலைமை நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜபாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. முதலில் ஓ.பி.எஸ். மற்றும் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் தரப்பு வாதங்கள் முடிந்ததை அடுத்து, ஜே.சி.டி.பிரபாகர் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகிறது. ஜே.சி.டி.பிரபாகர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம்; கட்சியிலிருந்து நீக்கும் முன் உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை.

கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பாக நோட்டீசும் அனுப்பவில்லை, விளக்கம் தர அவகாசமும் வழங்கப்படவில்லை. பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த 15 நாட்களில் உயர்நீதிமன்றத்தை அணுகி உள்ளதால் தாமதம் ஏதுமில்லை. தங்களின் வழக்குகளில் அடிப்படை முகாந்திரம் உள்ளது. வழக்கு நிலுவையில் இருந்தபோது தான் பழனிசாமி தரப்பு தேர்தல் நடைமுறையை தொடங்கியுள்ளது. இயற்கை நீதி மீறப்பட்டிருந்தால் தேர்தல் நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிடலாம் என ஜே.சி.டி.பிரபாகர் தரப்பில் வாதிடப்பட்டது.

Related Stories: