காஞ்சிபுரம் அருகே அதிமுக பிரமுகரின் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; 2 பெண்கள் உள்பட 8 பேர் உடல் சிதறி பலி: 25 பேர் படுகாயம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் இன்று திடீரென ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 8 பேர் உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் நரேந்திரன். இவர், காஞ்சிபுரம் அருகே குருவிமலை வலத்தோட்டம் வசந்தம் நகர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக பட்டாசு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு, கோயில் திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகள் மற்றும் இறப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுக்காக வாண வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலையில் மொத்தம் 6 அறைகள் உள்ளது. இதையொட்டி குடோனும் அமைந்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் அனைத்தும் குடோனில் பாதுகாப்புடன் சேகரித்து வைக்கப்படும். மேலும், இந்த தொழிற்சாலையின் உரிமையாளர் நரேந்திரன், காஞ்சிபுரம் பகுதியில் பட்டாசு கடை வைத்து, பட்டாசுகளை விற்பனை செய்து வருகிறார். மேலும் மொத்தமாகவும் வியாபாரிகளுக்கு பட்டாசுகள் விற்பனை செய்கிறார்.

இந்த ஆலையில், காஞ்சிபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இன்று காலை 9 மணியளவில் தொழிலாளர்கள் வழக்கம் போல வேலைக்கு வந்தனர். அனைவரும் தங்களது வேலையில் ஈடுபட்டிருந்தபோது பகல் 11 மணியளவில் திடீரென பயங்கர சத்தம் கேட்டது. தொழிற்சாலையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறியன.

சிறிது நேரத்தில் மொத்தமுள்ள 6 அறைகளில் 4 அறைகள் தூள் தூளாக பறந்தது. வேலையில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயத்துடன் அனைவரும் அலறி கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள், சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர். ஏராளமானோர் சம்பவ இடத்தில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் தொழிலாளர்கள் உடல்கள் ஆங்காங்கே துண்டு துண்டாகி கிடந்தது. இதை பார்த்ததும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர்.  இதற்கிடையில் தகவலறிந்தது காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களும் விரைந்தன.

தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் 2 பெண்கள் உள்பட 8 பேர் உடல் சிதறி இறந்து கிடந்தனர். படுகாயமடைந்த 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் தகவல் அறிந்து காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி, டிஐஜி பகலவன், மாவட்ட எஸ்பி சுதாகர், மேயர் மகாலட்சுமி மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போலீசார் வழக்கு பதிந்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெடிகள் அளவுக்கு அதிமாக அடுக்கி வைத்ததில் ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த சம்பவம் நடந்ததா அல்லது வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் அலட்சியம் காரணமாக விபத்து ஏற்பட்டதா எனவும் தீவிரமாக விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியே மிகுந்த பதற்றத்துடனும், பரபரப்புடனும் காணப்பட்டது.

Related Stories: