சிப்காட் அரசு பள்ளியில் விழா மாணவர்களின் கல்வி நலனில் பெற்றோருக்கும் அதிக பொறுப்பு-வட்டார கல்வி அலுவலர் பேச்சு

ராணிபேட்டை : மாணவர்களின் கல்வி நலனில் பெற்றோர்களுக்கும் அதிக பொறுப்பு உள்ளது என வட்டார கல்வி அலுவலர் ஜெயராஜ் பேசினார்.

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் வ.உ.சி.நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று `எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம்’ விழா நடந்தது. வாலாஜா வட்டார கல்வி அலுவலர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை கொ.சித்ரா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக வட்டார வளமைய மேற்பார்வையாளர் தேன்மொழி, ஆசிரியர் பயிற்றுநர்கள் ராஜலட்சுமி, சித்ரா கலந்து கொண்டனர்.

விழாவில், வட்டார கல்வி அலுவலர் ஜெயராஜ் பேசியதாவது:1 முதல் 3ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் எண்ணும் எழுத்தும் கற்று கொள்ள அரசு சுமார் ₹110 கோடி செலவு செய்து இத்திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இத்திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாணவர்களுடைய திறமைகளை வெளிக்கொண்டு வருவதுதான் இத்திட்டத்தின் நோக்கம். 4 மற்றும் 5ம் வகுப்புக்கு இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய பட்ஜெட்டில் ₹400 கோடி அறிவித்து உள்ளார்கள்.

கல்வி என்பது மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு மட்டுமல்ல. அதில், பெற்றோர்களுக்கும் அதிகமான பொறுப்பும், பெரும் பங்கும் உள்ளது. தமிழக அரசு கல்விக்காக பல வகையில் உதவி செய்து வருகிறது. பெற்றோர்களாகிய நீங்களும் பள்ளிக்கும், கல்விக்கும் புரவலர் திட்டத்தின் மூலம் பல வகையில் உதவலாம்.

இவ்வாறு அவர் பேசினார். மேலும், பள்ளி உதவி ஆசிரியர்கள் அன்புமாலா, கீதா, பாரதி, மாலினி, பள்ளி  மேலாண்மை குழு தலைவர் மணிமேகலை, உறுப்பினர் தீபா மற்றும் பள்ளி  மாணவ,  மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் பள்ளி உதவி ஆசிரியை அல்லி  நன்றி கூறினார்.

Related Stories: