சென்னை: ஆர்த்தி ஸ்கேன்ஸ் லேப்ஸ் சார்பில் நாடு முழுவதும் 100 மையங்களில் செயற்கை நுண்ணறிவு எலும்பு வயது தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு செயற்கை நுண்ணறிவு மருத்துவ தொழில்நுட்ப நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு சிஇ அங்கீகாரம் பெற்ற போன் எக்ஸ்பெர்ட் தானியங்கி முறையில் எலும்பு வயதைக் கணக்கிடுவதில் ஒரு தலைசிறந்த தங்கத் தரத்திலான தீர்வாக கருதப்படுகிறது.
இந்தத் தொழில்நுட்பம் எலும்பு வயது ஆய்வை மிகவும் துல்லியமாகவும், பாரபட்சமற்ற முறையிலும் மேற்கொள்ள உதவுகிறது. இதன் மூலம், வெவ்வேறு நபர்கள் ஆய்வு செய்யும்போது ஏற்படும் முடிவுகளில் மாற்றங்கள் தவிர்க்கப்பட்டு, ஒவ்வொரு முறையும் ஒரே எக்ஸ்ரேவுக்கு எப்போதும் நிலையான முடிவுகள் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
இதுகுறித்து ஆர்த்தி ஸ்கேன்ஸ் லேப்ஸ் நிறுவனத்தின் இயக்குநரும், கதிரியக்க நிபுணருமான டாக்டர் அருண்குமார் கோவிந்தராஜன் கூறுகையில்: ‘வளர்ச்சிக் குறைபாடுகள் மற்றும் நாளமில்லா சுரப்பி தொடர்பான பிரச்னைகளை கண்டறிவதில் எலும்பு வயது மதிப்பீடு முக்கியப் பங்கு வகிக்கிறது.
எங்களது அனைத்து மையங்களிலும் அறிமுகப்படுத்தியதன் மூலம், மனிதத் தவறுகளால் ஏற்படக்கூடிய முடிவுகளின் வேறுபாடுகளைக் களைந்து, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளின்படி துல்லியமான அறிக்கைகளை வழங்க முடிகிறது. எங்களது இந்த முயற்சி, மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு நோயறியும் பரிசோதனைகளின் மீது அதிக நம்பிக்கையை அளிப்பதோடு, நீண்ட கால சிகிச்சைகளை கண்காணிக்கவும் பெரிதும் உதவுகிறது, என்றார்.
இந்த நோயறியும் ஆழ்ந்த பகுப்பாய்வு, வளர்ச்சிக் குறைபாடுகள் மற்றும் ஹார்மோன் குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய மருத்துவர்களுக்குத் துணைபுரிகிறது. இந்தியாவில் உள்ள குழந்தை நல மருத்துவர்கள், நாளமில்லா சுரப்பி நிபுணர்கள் மற்றும் எலும்பு சிகிச்சை நிபுணர்களுக்கு நம்பகமான தரவுகளை வழங்குகிறது.
இதன் மூலம் உலகத்தரம் வாய்ந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இந்திய சாமானிய மக்களுக்கும் எளிதில் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நோயறியும் டயஸ்னோஸ்டிக் இமேஜிங்கில் செயற்கை நுண்ணறிவைப் பின்பற்றுவதில் புதிய தரநிலைகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
