கடைசி ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா - ஆஸி. சென்னையில் பலப்பரீட்சை: தொடரை வெல்லப்போவது யார்?

சென்னை: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. மும்பையில் நடந்த முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.

விசாகப்பட்டனத்தில் நடந்த 2வது போட்டியிலும் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை வசப்படுத்தி பதிலடி கொடுத்தது. இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் இன்று பகல்/இரவு ஆட்டமாக நடக்கிறது.

2வது போட்டியில் ஸ்டார்க், அபாட், எல்லிஸ் வேகக் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய இந்தியா, 26 ஓவரிலேயே வெறும் 117 ரன்னுக்கு பரிதாபமாக சுருண்டது. கோஹ்லி, அக்சர் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ஸ்டார்க் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட் - மிட்செல் மார்ஷ் தொடக்க ஜோடி, இந்திய அணி பந்துவீச்சை தவிடு பொடியாக்கி 11 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 121 ரன் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு அமர்க்களமான வெற்றியை பரிசளித்தது.

இந்த நிலையில், சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் வரிந்துகட்டுகின்றன. விசாகப்பட்டனத்தில் கிடைத்த வெற்றியால் ஆஸ்திரேலிய தரப்பு மிகுந்த உற்சாகத்துடன் உள்ளது. அதே சமயம், சுழலுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் சென்னை ஆடுகளத்தில் அசத்த இந்திய வீரர்களும் முனைப்புடன் உள்ளனர். அணியில் 3 ஸ்பின்னர்களை சேர்ப்பது, சூரியகுமார் யாதவை பின்வரிசையில் களமிறக்குவது குறித்து இந்திய அணி நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

ஆஸி. அணியிலும் வார்னர், மேக்ஸ்வெல் உடல்தகுதியை நிரூபித்தால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் உள்ளதால், ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ஷுப்மன் கில், விராத் கோஹ்லி, சூரியகுமார் யாதவ், கே.எல்.ராகுல் (கீப்பர்), இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், யஜ்வேந்திர சாஹல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாகூர், அக்சர் படேல், ஜெய்தேவ் உனத்கட். ஆஸ்திரேலியா: ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுஷேன், மிட்செ மார்ஷ், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரி, கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்லிஸ், ஷான் அபாட், ஆஷ்டன் ஏகார், மிட்செல் ஸ்டார்க், நாதன் எல்லிஸ், ஆடம் ஸம்பா.

Related Stories: