சித்தாந்தத்தின் அடிப்படையில் கூட்டணியை உருவாக்கினால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும்.! பிரசாந்த் கிஷோர் கருத்து

பாட்னா: பாஜகவை தோற்கடிக்க வேண்டுமானால் அதன் பலத்தை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.  பீகாரை சேர்ந்த பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பலன் அளிக்காது. ஏனெனில் அது நிலையற்றதாகவும், கருத்தியல் வேறுபட்டதாகவும் உள்ளது. பாஜகவை தோற்கடிக்க வேண்டுமானால், அதன் பலத்தை நீங்கள் (எதிர்க்கட்சிகள்) புரிந்து கொள்ள வேண்டும். இந்துத்துவா, தேசியவாதம், நலன்புரிதல் ஆகிய மூன்று பில்லரில், இரண்டு நிலைகளையாவது தாண்ட வேண்டும்.

இல்லாவிட்டால் அவர்களை வீழ்த்த முடியாது. இந்துத்துவா சித்தாந்தத்தை எதிர்த்துப் போராட சித்தாந்தங்களின் கூட்டணி இருக்க வேண்டும். காந்திவாதிகள், அம்பேத்கரியர்கள், சோசலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் ஆகியோரின் சித்தாந்த கூட்டணி வேண்டும். அதேநேரம் சித்தாந்தத்தின் அடிப்படையில் குருட்டு நம்பிக்கையுடன் இருக்க முடியாது. ஊடகங்களில் எதிர்க்கட்சிகள் அல்லது தலைவர்கள் ஒன்றிணைவதை பார்க்க முடிகிறது. அவர்களில் யார் யாருடன் மதிய உணவு சாப்பிடுகிறார்கள், யாரை டீக்கு அழைக்கிறார்கள் என்பதை பார்க்கிறோம். சித்தாந்தத்தின் அடிப்படையில் கூட்டணியை உருவாக்கினால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும். வேறு எந்த வழியும் இல்லை’ என்றார்.

Related Stories: