தமிழ்நாட்டில் கடந்த 20 நாட்களில் கோடை மழை 15% கூடுதலாக பெய்துள்ளது: சென்னையில் 1653% அதிகம்.! வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 1ம் தேதி முதல் 20ம் தேதி(நேற்று) வரை  கோடை மழை 15% கூடுதலாக பெய்துள்ளதாகவும், சென்னையில் 1653% அதிகமாக பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவ மழையும், அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை என இரண்டு பருவங்களாக மழைக்காலம் இருக்கிறது. மேலும் மார்ச் முதல் மே மாதம் வரை கோடை காலம், வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். இருப்பினும் வெப்பச்சலனன், காற்று திசை வேக மாறுபாடு உள்ளிட்ட காரணங்களால் கோடைக்காலத்தில் மழை பெய்யும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் மேலும் 4 நாட்களுக்கு மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 1ம் தேதி முதல் 20ம் தேதி வரை வழக்கமாக 14.5 மி.மீ கோடை மழை பதிவாகும் நிலையில் இந்த ஆண்டு 16.7 மி.மீ பெய்துள்ளது. சென்னையில் மார்ச் 1ம் தேதி முதல் 20ம் தேதி வரை கோடை மழை 1653% கூடுதலாக பெய்துள்ளது. சென்னையில் வழக்கமாக 3.2மி.மீ. மழை பெய்யும் நிலையில் தற்போது 56.1 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னைக்கு அடுத்தப்படியாக திருவள்ளூர் மாவட்டத்தில் 686% கூடுதலாக கோடை மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் மார்ச் 1ம் தேதி முதல் 20ம் தேதி வரை வழக்கமாக 5 மி.மீ. பெய்யும் நிலையில் தற்போது 39.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதைதொடர்ந்து ராணிப்பேட்டையில் வழக்கமாக 5.5மி.மீ. மழை பதிவாகும் நிலையில் தற்போது 35.6% மழை பதிவாகியுள்ளது, இது 546% கூடுதலாகும். தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக மழை பெய்திருப்பது தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: