பேட்ஸ்மேன்களை மிரட்டும் வேகமுடையவர் உம்ரான்: இஷாந்த்-பிரெட்லீ பாராட்டு

மும்பை: இந்திய அணியில் அனைத்து காலத்திலுமே தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் ஸ்பின்னர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடியராக அறியப்பட்டவர் காஷ்மீரை சேர்ந்த உம்ரான் மாலிக். ஐபிஎல்லில் 150-160 கிமீ வேகத்திற்கு மேல் வீசி அனைவரையும் கவர்ந்த அவர், அதன்விளைவாக இந்திய டி20 மற்றும் ஒரு நாள் அணிகளில் இடம்பிடித்தார். கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் அறிமுகமான உம்ரான் மாலிக், இதுவரை  8 ஒரு நாள் மற்றும் 8 டி20 போட்டிகளில் ஆடி முறையே 13 மற்றும் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல்லில் 17 போட்டிகளில் ஆடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடும் உம்ரான் மாலிக், ஐபிஎல்லுக்காக தீவிரமாக தயாராகி வருகிறார். உம்ரான் மாலிக் அசால்ட்டாக 150 கிமீ வேகத்தில் வீசும் நிலையில், அவரது லைன் மற்றும் லெந்த்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றெல்லாம் சிலர் கருத்து கூறிவருகின்றனர். இதுகுறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த்சர்மா கூறுகையில், ``உம்ரான் மாலிக்கால் 150-160 கிமீ வேகத்தில் பந்துவீச முடிகிறது என்றால் அந்த வேகத்தில் வீசலாம். ரன்கள் போவதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவரது வேகத்தின் மீதும் திறமை மீதும் நம்பிக்கை வைத்து வேகமாக வீச வேண்டும். அதிவேகத்தில் வீசுவதில் உள்ள நன்மை என்னவென்றால், வேகத்தின் மீதான பயத்தால் பேட்ஸ்மேன்கள் கண்ணை சிமிட்டக்கூட மாட்டார்கள். எனவே உம்ரான் மாலிக்கை அவரால் முடிந்த அளவு வேகத்தில் வீச அறிவுறுத்த வேண்டும்’’ என்றார்.

இதுபோல் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகம் பிரெட் லீ கூறுகையில், ``உம்ரான் மாலிக்கை கண்டிப்பாக ஒருநாள் உலக கோப்பையில் ஆடவைக்க வேண்டும். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலக கோப்பையிலேயே உம்ரான் மாலிக்கை ஆடவைத்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு அணியில் இடம் வழங்கப்படவில்லை. எனது முதன்மையான தேர்வு உம்ரான் மாலிக் தான். அவரை மாதிரி அதிவேகமாக பந்துவீசக்கூடிய மிரட்டலான ஃபாஸ்ட் பவுலரை எதிர்கொள்வது கடினம். எதிரணி பேட்ஸ்மேன்களை தனது அதிவேகமான பவுலிங்கால் மிரட்டகூடிய பவுலர் உம்ரான் மாலிக்’’ என்றார்.

Related Stories: