பாஜக, எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் 7வது நாளாக முடங்கியது

டெல்லி: பாஜக மற்றும் எதிர்க்கட்சி எம்.பிகளின் கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் 7வது நாளாக முடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கி இந்த இரண்டாவது அமர்வு வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது.ஆனால், கடந்த வாரம் முழுவதும் தொடர் அமளி ஏற்பட்டதால் ஒரு மசோதாவை கூட விவாதம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல இன்று காலை இரு அவைகளும் கூடிய சில நிமிடங்களிலேயே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தில் ஈடுப்பட்டனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் 7வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. அவை தலைவரான குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கர் அவரது அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்தை நடத்த வேண்டும் என அனைத்து கட்சிகளின் மாநிலங்களவை குழு தலைவர்களுக்கும் தகவல் அனுப்பினார்.

ஆனால் அக்கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாது என காங்கிரஸ் மற்றும் திமுக அவருக்கு தகவல் தெரிவித்தனர். பிற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை பாரதீய ஜனதா, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய மூன்று கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமே அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் பேச்சுவார்த்தை, ஆலோசனை எதுவும் நடைபெறாமல் அந்த கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.

அதை தொடர்ந்து 2 மணிக்கு மாநிலங்களவை கூடிய போது சில உறுப்பினர்கள் நாளை உகாதி , நௌரோ உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுவதால் விடுமுறை தேவை எனவும் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று கொண்ட அவைத்தலைவர் ஜகதீப் தன்கர் நாளை விடுமுறை என அறிவித்தார். இந்நிலையில் உகாதியையொட்டி நாளை விடுமுறை என்பதால் மாநிலங்களவை 23ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் அவை நடவடிக்கை தொடரலாம் என்று ஆரம்பிக்கும் போது மீண்டும் முழக்கங்கள் எதிர் முழக்கங்கள் என 7வது நாளாக அவை முடங்கின. மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு, அதானி விவகாரத்தை எழுப்பி இரு தரப்பும் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இடைப்பட்ட நேரத்தில் இன்று எதிர்கட்சிகளை சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து போராட்டம் நடத்தினர்.

மிக பெரிய பேனர் ஒன்றை திறந்து வைத்து அதன் அருகே நின்று தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். அதன் பிறகு அவர்கள் மீண்டும் இரு அவைகளுக்கு சென்றபோது மீண்டும் மோதல் வெடித்தது. ஏற்கனவே கடந்த 6 நாட்களாக விவாதம் எதுவும் நடக்காமல் நாடாளுமன்றம் முடங்கியிருந்த நிலையில், தற்போது எதிர்க்கட்சிகள், பாஜக எம்.பி.க்களின் அமளியால் 7வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: