வேளாண் பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: வேளாண் பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் விவசாயிகளுக்கான தனி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர் உரையாற்றிய அமைச்சர், சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.100 ஊக்கத்தொகை; பொது ரகத்திற்கு ரூ.75 ஊக்கத்தொகை வழங்கப்படும். நடப்பாண்டில் 25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நடப்பாண்டில் விவசாயிகளுக்கு ரூ.14,000 கோடி கூட்டுறவு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, வேளாண் பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. வேளாண் மானிய கோரிக்கையில் இடம்பெற்றவை தான், பட்ஜெட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளன. வேளாண் நிதி நிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைப்பதாக தெரியவில்லை. கரும்புக்கு ஆதார விலை உயர்த்தப்படும் என்ற திமுக வாக்குறுதி பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 தராமல் ரூ.100 ஊக்கதொகை என ஏமாற்று வேலை செய்கின்றனர் என்று தெரிவித்தார். நெல் மூட்டைகளை பாதுகாக்க கவனம் செலுத்தவில்லை. வேளாண் பட்ஜெட் ஏமாற்றும் வகையில் உள்ளது எனவும் எடப்பாடி கூறினார்.

Related Stories: