தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர்க்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு!

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர்க்கான யோகாசனம், தடகளம், எறிபந்து மற்றும் நீச்சல் ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நடவடிக்கைகளில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மாவட்ட அளவிலான பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் யோகாசனம், தடகளம், எறிபந்து ஆகியவை நேரு பூங்கா விளையாட்டு அரங்கத்திலும் மற்றும் நீச்சல் போட்டிகள் வேளச்சேரி நீச்சல் குளத்திலும் மார்ச்24-ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

யோகாசனத்தில் பத்மாசனம், மத்ஸ்யாசனம், ஹலாசனம், உஷ்ட்ராசனம், தனுராசனம் ஆகிய ஆசனங்களும், தடகளப் போட்டிகளில் 100 மீ ஓட்டம், 200 மீ ஓட்டம், 400 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய விளையாட்டுக்களும், நீச்சல் போட்டிகளில் 50 மீ ப்ரீ ஸ்டைல், 50 மீ பேக் ஸ்ட்ரோக், 50 மீ ப்ரெஸ்ட்ரோக், 50 மீ பட்டர்ஃபிளை, 4 x 50 மீ ஃபிரீ ஸ்டைல் ரிலே ஆகிய விளையாட்டுக்களும் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் 20 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் கலந்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

(24.03.2023) அன்று காலை 7.00 மணிக்கு போட்டி நடைபெறும் விளையாட்டு அரங்கத்தில் பதிவுசெய்து போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. 9 மணிக்கு மேல் வருபவர்கள் போட்டிகளுக்கு பதிவு செய்ய இயலாது. மேலும் விவரங்களுக்கு ஆடுகளம் தகவல் மையத்தின் தொலைபேசி எண். 9514000777 -இல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: