காவல் துறை ஏற்பாடு செய்திருந்த வேலைவாய்ப்பு முகாம்: போலீசாரின் வாரிசுகள் 123 பேருக்கு தனியார் நிறுவனங்களில் வேலை!

சென்னை: காவல் துறை ஏற்பாடு செய்திருந்த வேலை வாய்ப்பு முகாமில் போலீசாரின் வாரிசுகள் 123 பேருக்கு தனியார் நிறுவனங்களில் வேலை கிடைத்துள்ளது. தமிழக காவல் துறையில் பணிபுரியும் போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத் துறை மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் துணைவியார்கள் மற்றும் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை சங்கங்களின் கூட்டமைப்பு, இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்த போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

அதன்படி, வேளச்சேரி, குருநானக் கல்லூரி வளாகத்தில் சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களில் பணிபுரியும் காவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத் துறை மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் துணைவியார்கள் மற்றும் வாரிசுகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. இதை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கிவைத்தார்.

இந்த வேலைவாய்ப்பு முகாம்19-ம் தேதியும் நடைபெற்றது.

இந்த முகாமில் 1,038 பேர் கலந்து கொண்டனர். அவர்களிடமிருந்து சுய விவரங்கள் பெறப்பட்டு கல்வி தகுதியின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுகள் மற்றும் இறுதிக்கட்ட தேர்வுகள் நடத்தி, சீருடைப் பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 123 பேர் வேலைவாய்ப்பு முகாமிலே பல்வேறு தனியார் நிறுவனங்களால் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 580 பேர் இறுதிக்கட்ட தேர்வுகளுக்காக தனியார் நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்ட சீருடைப் பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு விரைவில் வேலைக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

Related Stories: