கிரேஸ் ஹாரிஸ் அதிரடி ஜயன்ட்சை வீழ்த்தியது வாரியர்ஸ்: பிளேஆப் ஆட்டத்துக்கு தகுதி

மும்பை: மகளிர் பிரிமியர் லீக் டி20ல் குஜராத் ஜயன்ட்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற யுபி வாரியர்ஸ் அணி பிளே ஆப் ஆட்டத்தில் விளையாடுவதை உறுதி செய்தது. பிராபோர்ன் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த குஜராத் ஜயன்ட்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன் குவித்தது. சோபியா டங்க்லி 23, லாரா வுல்வார்ட் 17, தயாளன் ஹேமலதா 57 ரன் (33 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), ஆஷ்லி கார்ட்னர் 60 ரன் (39 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர். வாரியர்ஸ் பந்துவீச்சில் ராஜேஷ்வரி கெயக்வாட், பார்ஷவி சோப்ரா தலா 2 விக்கெட், அஞ்சலி சர்வனி, சோபி எக்லஸ்டோன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

அடுத்து களமிறங்கிய யுபி வாரியர்ஸ் 19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. தாஹ்லியா மெக்ராத் - கிரேஸ் ஹாரிஸ் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 78 ரன் சேர்த்து வெற்றிக்கு உதவியது. தாஹ்லியா 57 ரன் (38 பந்து, 11 பவுண்டரி), கிரேஸ் ஹாரிஸ் 72 ரன் (41 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) விளாச... கேப்டன் அலிஸா ஹீலி 12, சோபி எக்லஸ்டோன் 19* ரன் எடுத்தனர். ஜயன்ட்ஸ் பந்துவீச்சில் கிம் கார்த் 2, மோனிகா, கார்ட்னர், தனுஜா, ஸ்நேஹ் ராணா தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

கிரேஸ் ஹாரிஸ் ஆட்ட நாயகி விருது பெற்றார். இந்த வெற்றியால் யுபி வாரியர்ஸ் அணி பிளேஆப் ஆட்டத்தில் (எலிமினேட்டர்) விளையாடுவதை உறுதி செய்தது. ஆர்சிபி, குஜராத் ஜயன்ட்ஸ் அணிகள் கடைசி 2 இடத்தை மட்டுமே பிடிக்க முடியும் என்பதால், பிளேஆப் வாய்ப்பை இழந்து ஏமாற்றத்துடன் வெளியேறுகின்றன. டபுள்யு.பி.எல் முதலாவது சீசனில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கும் நிலையில், லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறும். 2வது மற்றும் 3வது இடம் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் ஆட்டத்தில் மோத வேண்டும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெறும். எலிமினேட்டர் ஆட்டம் மார்ச் 24ம் தேதியும், இறுதிப் போட்டி 26ம் தேதியும் நடைபெற உள்ளன.

Related Stories: