தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 1000 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நேற்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றம் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு  ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் வித்யாசாகர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்து, நேற்று மாலை 1000க்கும் மேற்பட்ட வேலை நாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினார். செங்கல்பட்டில் வித்யாசாகர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் வித்யாசாகர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நேற்று காலை தனியார் துறை சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமுக்கு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார்.

காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் தமிழ்நாடு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று துவக்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் இதுவரை 1,44,555 வேலைநாடுநர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் பலர் பயன்பெறுவதற்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் மாதந்தோறும் இதுபோன்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் வேலைநாடுநர்களும் தனியார் துறை வேலை அளிப்பவர்களும் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வழிவகை செய்யப்பட்டு வருகிறது. நேற்று மாலை நடைபெற்ற முகாம் நிறைவில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் நேரடி தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்ற 1000க்கும் மேற்பட்ட வேலை நாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கி வாழ்த்தினார்.

மேலும், திறன் குறைபாடு காரணமாக பணிநியமனம் பெறாதவர்கள் முகாம்களிலேயே கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் குறுகிய கால திறன் எய்தும் பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 35,507 வேலை நாடுநர்கள் தனியார் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) ஆ.ஜோதிமணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மு.தனசேகரன், மகளிர் திட்ட இயக்குநர் செல்வராணி. செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சித்தலைவர் செம்பருத்தி துர்கேஷ், நகராட்சி மன்ற குழுத்தலைவர் தேன்மொழி நரேந்திரன், வித்யாசாகர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் விகாஸ் சுரானா, முதல்வர் இரா.அருணாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: