தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் தாக்கல் : பட்ஜெட்டை புறக்கணித்து அதிமுகவினர் வெளிநடப்பு!!

சென்னை: தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கலை புறக்கணித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பட்ஜெட் கூட்டத்தொடருக்காக தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கூடியது. பட்ஜெட் வாசிக்க தொடங்கும் முன்னரே சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேச அனுமதி கோரி அதிமுகவினர் முழக்கமிட்டனர். ஆனால் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பேச வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அதுவரை அதிமுகவினர் அமைதிக்காக்கும்படியும் சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தினார்.

பேச அனுமதி மறுக்கப்பட்டதால் சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தலுக்கு செவி சாய்க்காமல் தமிழக பட்ஜெட் தாக்கலை புறக்கணித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.இதனிடையே அதிமுகவினர் அமளிக்கு மத்தியில் தொடர்ந்து 3வது ஆண்டாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பின்னர் பேசிய அவர், தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறையை ரூ.62,000 கோடியிலிருந்து ரூ.30,000 கோடியாக குறைத்திருக்கிறோம். பொருளாதார வளர்ச்சி, சமூக பாதுகாப்பிற்கு, திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

மாநில அரசின் வரி வருவாய் 2020-21ல் 5.58% குறைந்தது; மாநில அரசின் வரி வருவாய் கடந்த 2 ஆண்டில் 6.11%ஆக உயர்ந்துள்ளது.மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசன் ஆகியோருக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்.அண்ணல் அம்பேத்கரின் படைப்புகள் ரூ.5 கோடியில் தமிழில் மொழிபெயர்க்கப்படும்.தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தி தமிழில் மென்பொருள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் தமிழறிஞர்கள் 591 பேர் இலவச பயணத் திட்டம் அமல்படுத்தப்படும்,என்றார்.

Related Stories: