ராகுலின் கேம்பிரிட்ஜ் விவகாரத்திற்கு மத்தியில் ஆக்ஸ்போர்டு யூனியன் கருத்தரங்க அழைப்பை நிராகரித்த வருண் காந்தி

புதுடெல்லி: ஆக்ஸ்போர்டு யூனியன் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கின் அழைப்பை பாஜக எம்பி வருண்காந்தி மறுத்து, அந்த அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் இங்கிலாந்து சென்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவர் பேசும்போது, இந்திய ஜனநாயகம் குறித்தும், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளுக்கு ஏற்படும் நிலைமை குறித்தும் சில கருத்துகளை தொிவித்தார். இவரது கருத்து பெரும் சர்ச்சையானதால், கடந்த 4 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. இந்த நிலையில் பாஜக எம்பியான வருண் காந்திக்கு (மேனகா காந்தியின் மகன்), லண்டன் ஆக்ஸ்போர்டு யூனியன் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்குக்கு அழைப்பு வந்துள்ளது.

இந்த கருத்தரங்கின் விவாதப் பெருளானது ‘மோடியின் தலைமையில் இந்தியா சரியான பாதையில் செல்கிறது என்பதை இந்த சபை நம்புகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு யூனியனுக்கு வருண்காந்தி எழுதியுள்ள பதில் கடிதத்தில், ‘ஆக்ஸ்போர்டு யூனியன் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கிற்கு வர இயலாது. தாங்கள் விவாதிக்கக் கூடிய கருப்பொருளின் தலைப்பில் பேச இயலாது. இதுபோன்ற பிரச்னைகளை நாடாளுமன்றத்திலும் பிற இடங்களிலும் எழுப்ப விரும்புகிறேன். சர்வதேச கருத்தரங்கில் எழுப்புவதால் எந்த பயனுமில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாக, எங்களது ஜனநாயக அமைப்பை வலுப்படுத்த என்னால் முடிந்த பணியை மேற்கொள்வேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: