திருச்சியில் நடைபயிற்சி சென்ற பேராசிரியை மீது கொடூர தாக்குதல் நடத்தி வழிப்பறி: சாலையில் தர தரவென இழுத்து சென்ற வீடியோ வைரல்

திருச்சி: திருச்சியில் நடைபயிற்சி சென்ற பேராசிரியையிடம் மது குடிக்க பணம் கேட்டு தராததால் கொடூரமாக தாக்கி சாலையில் தர தரவென வாலிபர் இழுத்து சென்ற வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி வஉசி ரோட்டை சேர்ந்தவர் பேராசிரியை சீதாலட்சுமி (55). திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் இசிசி துறை தலைவராக உள்ளார். கடந்த 12ம் தேதி மாலை தனியார் பள்ளி மைதானத்தில் டூவீலரை நிறுத்தி விட்டு நடைபயிற்சி செய்தார். பின்னர் டூவீலரை எடுக்க வந்தபோது மது வாங்க பணம் கேட்டு தொந்தரவு செய்த வாலிபரை சீதாலட்சுமி  திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கட்டையால் அவரது தலையில் சரமாரி தாக்கினார். இதில் நிலைகுலைந்து விழுந்தவரின் கால்களை பிடித்து தர தரவென சிறிது தூரம் இழுத்து சென்றார். பின்னர், அவரது செல்போன், டூ வீலரை எடுத்துக்கொண்டு தப்பினார். நெஞ்சை பதைபதைக்க வைத்த இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் சாலையில் மயங்கி கிடந்த சீதாலட்சுமியை, அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு  தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கன்டோன்மென்ட் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் அந்த வாலிபர் திருடிய டூ வீலருடன் அதிவேகமாக சென்ற போது விபத்தில் சிக்கி கால் உடைந்ததால்  திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விசாரணையில் அவர், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பழமனேரி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (32) என்றும், திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் வசிப்பதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: