ஹெல்த்தி மூலிகை ரெசிப்பிகள்

நன்றி குங்குமம் டாக்டர்

முடக்கத்தான் பொடி

தேவையான பொருட்கள்:

உலர்ந்த முடக்கத்தான் கீரை -  2 கப்

கடலைப்பருப்பு -  கால் கப்

உளுத்தம் பருப்பு  - அரை கப்

உப்பு  - தேவைக்கேற்ப

காய்ந்த மிளகாய்  - 12

புளி  -  சிறிய நெல்லிக்காய் அளவு

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

எண்ணெய் -  ஒரு தேக்கரண்டி

செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு காய்ந்ததும். அதில் பெருங்காயம் தாளிக்கவும். பின்னர், பருப்பு வகைகளை அதில் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். வறுத்த பருப்புகளை தனியே வைக்கவும். பிறகு அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் உலர்ந்த கீரையை அதில் சேர்த்து வறுக்கவும். கீரை மொறு மொறு என பொரிந்தவுடன் இறக்கி ஆறவிடவும். பின்னர்,  எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து பொடி செய்து கொள்ளவும். சூடு ஆறியதும் இந்த பொடியை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும். சூடான சாதத்தில் சிறிது எண்ணெய் விட்டு இந்த பொடியுடன் பரிமாறவும். இந்த பொடி இட்லி தோசைக்கும் நன்றாக இருக்கும்.

பலன்கள்: முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மூட்டு மற்றும் எலும்புகள் வலுவாகும். மலக்சிக்கல், மூல நோய்கள், கரப்பான், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகின்றன. வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். நிணநீர் மண்டலங்களில் உள்ள தேவையற்ற வாயுக்களை நீக்கி கை, கால் மூட்டு வலிகளைப் போக்கும்.

வேப்பம்பூ துவையல்

தேவையான பொருட்கள்:

வேப்பம்பூ -  1 கைப்பிடி அளவு

கடுகு -   அரை தேக்கரண்டி ‌

உளுத்தம்‌பருப்பு - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்‌- 2

புளி -  நெல்லிக்காய்‌அளவு

பொடித்த வெல்லம்‌- 1 தேக்கரண்டி,

தேங்காய்த்‌துருவல்‌-  1 கிண்ணம்

பூண்டுப்‌பல்‌- 8

உப்பு, எண்ணெய்‌- தேவைக்கேற்ப

செய்முறை: வாணலியில்‌சிறிது எண்ணெய்‌விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாயைச்‌ சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும்‌. பின்‌அதே வாணலியை அடுப்பில்‌வைத்து தீயைக்‌குறைத்து, சிறிதளவு எண்ணெயில் வேப்பம்‌பூவை வறுத்து அடுப்பை அணைக்கவும்‌. இனி வறுத்து வைத்திருப்பவைகளுடன்‌ புளி, வெல்லம்‌, தேங்காய்த்‌ துருவல்‌, பூண்டுப்‌பல் சேர்த்து தேவையான அளவு தண்ணீர்‌உப்பு சேர்த்து மிக்ஸியில்‌ அரைத்துக்‌ கொள்ளவும்‌. சுவையான வேப்பம்பூ துவையல் தயார். சாதத்தில்‌ சேர்த்து சாப்பிடலாம்.  இட்லி, தோசைக்கும்‌ தொட்டுக்‌கொள்ளலாம்‌. குழந்தைகளின் வயிற்றுக்கு மிகவும் நல்லது.

பலன்கள்: வேப்பம் பூவுக்கு ஜீரணத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு.  வாரத்தில் இருமுறை வேப்பம் பூ உணவில் சேர்த்துவந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிவதோடு மீண்டும் பூச்சிகள் வயிற்றில் சேராமல் தடுக்கும் சக்தி வேப்பம்பூ துவையலுக்கு உண்டு.

செம்பருத்திப் பூ ரசம்

தேவையான பொருட்கள் :

செம்பருத்திப் பூ -  4

துவரம்பருப்பு  - 1 மேசைக்கரண்டி

தக்காளி - 1

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

கடுகு -  அரை தேக்கரண்டி

மிளகாய் - 1

பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை.

உப்பு -  தேவைக்கேற்ப

எலுமிச்சைச் சாறு -     2 தேக்கரண்டி

எண்ணெய்/நெய் - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை -   சிறிதளவு

கொத்துமல்லி  - சிறிதளவு

செய்முறை : செம்பருத்திப் பூவில் உள்ள காம்பு, மகரந்தம்  நீக்கிவிட்டு இதழ்களை மட்டும்  தண்ணீரில் கொதிக்க  வைக்கவும். துவரம் பருப்பை  வேகவைத்து  எடுத்து  வைத்துக் கொாள்ளவும்.  பின்னர், கொதித்த தண்ணீரில்  தக்காளி, மிளகாய், மிளகு, சீரகத்தைப் பொடித்து சேர்க்கவும். அதனுடன் வேகவைத்த  துவரம் பருப்பைக் கரைத்து ஊற்றவும். பின்னர், வாணலியில்  எண்ணெய்  ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம்,  தாளித்து கறிவேப்பிலை பெருங்காயப் பொடி சேர்க்கவும். அது பொங்கி வரும்போது கொத்துமல்லி தூவி இறக்கவும். ஆறிய பின் எலுமிச்சைச் சாறு கலந்தால் சுவையான  செம்பருத்தி  ரசம் தயார்.

பலன்கள்: செம்பருத்திப் பூ இதழின் சாறு நீர்ச் சுருக்கை போக்கி சிறுநீரை பெருக்கி நஞ்சுகளை வெளியேற்றும். ரத்த சோகை, இதயநோய் அணுகாமல் தடுக்கும் ஆற்றல் செம்பருத்திப் பூவிற்கு உண்டு. உடல் குளிர்ச்சிக்கு செம்பருத்தி ரசம் நல்ல பலன் தரும்.

தொகுப்பு- ஸ்ரீதேவி

Related Stories: