பொதுக்குழு தீர்மானம் அமலுக்கு வந்து 8 மாதத்துக்கு பின் தாக்கல் செய்ததால் மனோஜ் பாண்டியன் வழக்கு செல்லாததாகிவிட்டது: ஐகோர்ட்டில் எடப்பாடி பதில் மனு..!

சென்னை: பொதுக்குழு தீர்மானம் அமலுக்கு வந்து 8 மாதத்துக்கு பின் தாக்கல் செய்ததால் மனோஜ் பாண்டியன் வழக்கு செல்லாததாகிவிட்டது என எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவரது தோழி சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறைக்கு சென்றபின் கடந்த 2017ல் அதிமுக பொதுக்குழு கூடி சசிகலா பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதை தொடர்ந்து, அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது.

ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிலிருந்து அதிமுக இரட்டை தலைமையுடன் செயல்பட்டு வந்தது. இதற்கிடையே, கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை உருவானது. இதில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு உடன்பாடில்லை. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச்செயலாளராக்க அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டனர். அதன்படி அதிமுக பொதுக்குழு கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி கூடியது. அதில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

இதையடுத்து கட்சியின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனும், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஓ.பன்னீர்செல்வம் மற்றும்  அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதியாலும் தொடர்ந்து இரு நீதிபதிகள் அமர்விலும் தள்ளுபடி செய்யப்பட்டது.  இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பில், பொதுக்குழுவில் எடப்படாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று கூறப்பட்டிருந்தது. அதே நேரத்தில் பொதுக்குழு மற்றும் தீர்மானம் தொடர்பான சிவில் வழக்குகளை இந்த தீர்ப்பு கட்டுப்படுத்தாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 2022 ஜூலையில் நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தன்னை கட்சியிலிருந்து நீக்கம் செய்தது ஆகியவற்றை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கை தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், 2022 ஜூலை 11ல் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்ட விரோதமானது. எந்த வாய்ப்பும் தராமல் கட்சியிலிருந்து நீக்கம் செய்துள்ளனர். எனவே, கட்சியிலிருந்து நீக்கம் செய்ததற்கு தடை விதிக்க வேண்டும். பொதுக்குழு தீர்மானங்களை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்தநிலையில் இந்த வழக்கில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதில் தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், கட்சியை தற்போது இடைக்கால பொதுச்செயலாளரே பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என, இந்த வழக்கில் பிரதிவாதிகள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கும் மனோஜ் பாண்டியன், தற்போது அதிமுகவின் உறுப்பினரே அல்ல. கடந்த 2022 ஜூன் 23ம் தேதி பொதுக்குழு கூட்டத்துக்கு முன் ஜூன் 14ம் தேதி நான்கு மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சி மீண்டும் ஒற்றைத் தலைமைக்கு மாற வேண்டும் என அனைத்து மாவட்டச் செயலாளர்களும் விருப்பம் தெரிவித்தனர். கட்சியின் பொதுக்குழு நடந்து கொண்டிருந்த போது கட்சி அலுவலகத்தை தாக்கிய மனுதாரருக்கு பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடர எந்தவித அடிப்படை உரிமையும் இல்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட முடியாது என்ற வாதத்தை நீதிமன்றங்கள் உறுதி செய்துள்ள நிலையில், கட்சியில் இருந்து தன்னை நீக்க அவர்களுக்கு தான் அதிகாரம் உள்ளது என கூற முடியாது.

கட்சி விதிகள் திருத்தம், இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு குறித்த தீர்மானங்களால் மனுதாரர் எந்த பாதிப்புக்கும் ஆளாகவில்லை என்பதால் எந்த நிவாரணமும் கோர முடியாது என்றும், பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு வந்து எட்டு மாதங்களுக்கு பின் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு செல்லாததாகி விட்டது என்பதால் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையானது நாளை மீண்டும் நடைபெறவுள்ளது.

Related Stories: