ரயில்வே பணிக்கு நிலத்தை லஞ்சம் பெற்ற வழக்கு லாலு குடும்பத்துக்கு சிபிஐ நீதிமன்றம் ஜாமீன்

புதுடெல்லி:  ரயில்வே பணிக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில் லாலு பிரசாத் குடும்பத்துக்கு சிபிஐ நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ்,  கடந்த 2004-2009ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக பதவி வகித்து வந்தார். அப்போது,   ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி பீகாரை சேர்ந்த பலரிடம் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக லாலு பிரசாத் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த முறைகேட்டில் லாலுவின் மனைவியும், பீகார் முன்னாள் முதல்வருமான ரப்ரி தேவி, அவர்களது மகள் மிசா பாரதி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நடத்தி வந்த சிபிஐ, குற்றச்சாட்டை நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் இல்லை எனக்கூறி கடந்த 2021ம் ஆண்டு விசாரணையை முடித்து கொண்டது.  இந்நிலையில், தற்போது இந்த வழக்கை சிபிஐ  மீண்டும் எடுத்து விசாரித்து வருகிறது. அதன்படி கடந்த வாரம் திங்கட்கிழமை பாட்னாவில் உள்ள லாலுவின் மனைவி ரப்ரி தேவி வீட்டில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் அவரிடம்  4 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை செய்தனர். இதேபோல் டெல்லியில் மகள் மிசா பாரதி வீட்டில் தங்கியுள்ள லாலு பிரசாத்திடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள பீகார் துணைமுதல்வர் தேஜஸ்வி யாதவின் வீடு, டெல்லி, மும்பை, பாட்னா, ராஞ்சி உள்ளிட்ட இடங்களில் லாலு பிரசாத்துக்கு சொந்தமானதாக கூறப்படும் 24க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் காட்டப்படாத ரூ.1  கோடி ரொக்கப்பணம், ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள், தங்கக்கட்டிகள், முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ரூ.600 கோடி மதிப்பிலான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ரப்ரி தேவி, மகள் மிசா பாரதி  உள்ளிட்ட அனைவரும் டெல்லி ரோஸ்அவென்யூவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று காலை நேரில் ஆஜராகினர்.  அப்போது லாலு பிரசாத் குடும்பத்தினர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ஒவ்வொருவரும் தலா ரூ.50 ஆயிரம் பிணைப்பத்திரம் செலுத்தியதை தொடர்ந்து 3 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Related Stories: