ஊழல் வழக்கில் முன்ஜாமீன் பாஜ எம்எல்ஏவுக்கு எதிரான மனு ஏற்பு

புதுடெல்லி: ஊழல் வழக்கில் பாஜ எம்எல்ஏ விருபாட்சப்பாவுக்கு கர்நாடகா உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியதை எதிர்த்து லோக்ஆயுக்தா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது. கர்நாடகாவில் டெண்டர் விவகாரம் தொடர்பாக பாஜ எம்எல்ஏ மாடால் விருபாட்சப்பா சார்பில் அவரது மகன் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது லோக்ஆயுக்தாவிடம் சிக்கினார். மகனின் அலுவலகம் மற்றும் எம்எல்ஏவின் அலுவலகத்தில் லோக்ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.8.10 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் விருபாட்சப்பா கைதாவதை தவிர்க்க, கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். இந்நிலையில், விருபாட்சப்பாவின் முன்ஜாமீனை எதிர்த்து லோக்ஆயுக்தா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டுமென லோக்ஆயுக்தா தரப்பில் நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வில் நேற்று வலியுறுத்தப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி, மனுவை ஏற்றுக் கொண்டு விரைவில் வழக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்தார். எனவே இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: