சென்னை தொழிலதிபர் வீட்டில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகை திருடிய கொள்ளையன் கைது: 37 சவரன் நகைகள், வைர மோதிரம், 42 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்பு

சென்னை: வடபழனியில் கோனிகா கலர் லேப் நிறுவன தொழிலதிபர் வீட்டில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், பணம் கொள்ளையடித்த வழக்கில் சிசிடிவி பதிவுகள் மூலம். பிரபல கொள்ளையனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 37 சவரன் நகைகள், ரூ.16 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரம், 41.5 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.62 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை வடபழனி குமரன் காலனி 2வது தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவர், ‘கோனிகா’ என்ற பெயரில் கலர்லேப் நடத்தி வருகிறார். கடந்த 22ம் தேதி, மனைவி அருணா தேவியுடன் சந்தோஷ்குமார் ஐதராபாத்துக்கு சென்றார்.

பின்னர், அங்கு பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு, 1ம் தேதி வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 66 சவரன் தங்க நகைகள், வைர நகைகள், ரூ.13.5 லட்சம் ரொக்கம் மற்றும் 80 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தொழிலதிபர் சந்தோஷ்குமார் அளித்த புகாரின் படி, விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 உதவி கமிஷனர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். இதற்கிடையே, தூத்துக்குடி சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த முத்து(32) என்பவரை நொளம்பூர் போலீசார், வாகன திருட்டு வழக்கில் கைது செய்தனர்.

கைதான முத்து வீட்டில் அதிகளவு நகைகள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இது குறித்து, கொள்ளையன் முத்துவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போதுதான், வடபழனியில் கோனிகா கலர் லேப் நிறுவன உரிமையாளர் சந்தோஷ்குமார் வீட்டில் கொள்ளையடித்த நகைகள் என குற்றவாளி ஒப்புக் கொண்டுள்ளார். அதை உறுதிப்படுத்தும் வகையில், தொழிலதிபர் வீட்டின் அருகே உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளுடன் ஒப்பிட்டு பார்த்தபோது, முத்து கொள்யைடித்து உறுதியானது.

பிரபல கொள்ளையனான முத்து அயப்பாக்கம் பெருமாள் கோயில் தெருவில் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் செய்யும் கூலி வேலை செய்து கொண்டு, பகல் நேரங்களில் பல இடங்களில் பூட்டி கிடக்கும் வசதியான நபர்களின் வீடுகளை நோட்டமிட்டு தனி நபராக தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். அதைதொடர்ந்து திருடிய நகைகள் மற்றும் பணத்தை கொண்டு, சேலம் மற்றும் ஈரோடு பகுதிகளுக்கு சென்று அழகிகளுடன் உல்லாசமாக இருந்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர், நொளம்பூர் போலீசார் பிரபல கொள்ளையன் முத்துவை விருகம்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்படி விருகம்பாக்கம் போலீசார் முத்துவிடம், தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவனிடம் இருந்து 37 சவரன் நகை, ரூ.16 லட்சம் வைர மோதிரம் ஒன்று, 41.5 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.62 ஆயிரம் ரொக்கம், ஒரு செல்போன், கொள்ளை சம்பவத்தில் பயன்படுத்திய கவ் பார் ஆகியவற்றை பறிமுதல்

செய்தனர்.

இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில், கூடுதல் கமிஷனர் அன்பு நிருபர்களிடம் கூறியதாவது: தொழிலதிபர் சந்தோஷ்குமார் ரூ.13.5 லட்சம் பணம், 66 சவரன் நகை,80 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளைபோனதாக புகார் அளித்து இருந்தார். அதன் பிறகு அவரது குடும்பத்தினரிடம் நாங்கள் விசாரணை நடத்திய போது, ரூ.13.5 லட்சம் இல்லை என்றும், ரூ.2.25 லட்சம் தான் என தெரியவந்தது. தனிப்படையில் இருந்த ஆய்வாளர் ஒருவர் கடந்த 5 மாதங்களாக ஒரு குற்றவாளி தலைமறைவாக இருப்பதாக கூறினார். அதன்படி, அந்த குற்றவாளி புகைப்படத்துடன் சிசிடிவி காட்சிகளை ஒப்பிட்டபோது, ஒரே மாதிரியாக இருந்தது. பிறகு, சந்தோஷ் குமார் வீட்டில் திருடியது முத்து தான் என உறுதியானது. கடந்த 26ம் தேதி இந்த வீட்டை நோட்டமிட்டுள்ளார்.

பிறகு மறுநாள் 27ம் தேதி மாலை வெளிச்சம் குறைந்த நேரத்தில் தனி நபராக வீட்டு சுவற்றில் ஏறி குதித்து கவ் பார் மூலம் கதவை உடைத்து கொள்ளையடித்துள்ளார். தற்போது வரை வீட்டில் பதிவான கைரேகைகள் மற்றும் சிசிடிவி காட்சிகளை வைத்து பார்க்கும் போது, தனி நபராக இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. கொள்ளையடித்த பொருட்களை ஆட்டோவில் ஏற்றி சென்றதாக விசாரணையில் கூறியுள்ளார். அது தொடர்பாக அவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள முத்து 3 திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. மீதமுள்ள நகைகளை முழுமையாக பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூடுதல் கமிஷனர் அன்பு கூறினார்.

Related Stories: