தமிழகத்தில் முதன்முறையாக நன்னீர் திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்கள் இணைந்து ரூ.1.46 கோடியில் நாகன்தாங்கல் எரி புனரமைக்கப்பட்டு கற்றல் மையம்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்

ஆவடி: தமிழகத்தில் முதன்முறையாக நன்னீர் திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்கள் இணைந்து ரூ.1.46 கோடியில் கற்றல் மையம் அடங்கிய புனரமைக்கப்பட்ட நாகன்தாங்கல் ஏரியை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார். ஆவடி அடுத்த பொத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நாகன்தாங்கல் ஏரி உள்ளது. 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் பயனற்ற நிலையில் இருந்தது. இந்நிலையில், டாடா கம்யூனிக்கேஷன்ஸ் நிறுவனம் மற்றும் பிச்சாண்டிக்குளம் வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து ரூ.1.46 கோடி  செலவில், 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட நாகன்தாங்கல் ஏரியின் 4 ஏக்கரில், 1.5 மீட்டர் ஆழத்திற்கு தூர்வாரப்பட்டது.  ஏரியின் நீர் மட்டம் உயர்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால்,தற்போது 1 லட்சம் கன.மீட்டர் நீர் உயர்ந்துள்ளது.

மேலும், ஏரியை சுற்றி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  வெப்பமண்டல உலர் பசுமைமாறா வன மரக்கன்றுகள் மற்றும் புல் வகைகள் நடப்பட்டு சீரமைப்பு பணிகள் முடிவடைந்தது. இந்த நிலையில் புனரமைக்கப்பட்ட நாகன்தாங்கல் ஏரி மற்றும் ‘’தி ப்ளு க்ரீன் சென்டர்’’ கற்றல் கூடம் துவக்க விழா, பொத்தூர் ஏரி அருகில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், பிச்சாண்டிக்குளம் வன நிறுவனர் ஜாஸ் ப்ரூக்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு கற்றல் கூடத்தை துவக்கி வைத்து பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து, மரக்கன்றுகளை நட்டப்பின் நிருபர்களை  சந்தித்த திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியதாவது:  திருவள்ளுர்  ஏரிகள் நிறைந்த மாவட்டம். பல்வேறு நீர்நிலைப்பகுதிகளை மீட்டுடெடுத்து வருவதாகவும், ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் 1,600 ஏக்கர் நிலங்கள் இருந்து மீட்டுள்ளன.  

சென்னை நகரை ஒட்டியுள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை இன்னும் அகற்றவேண்டி உள்ளது. அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தை பொருத்தவரை ஆக்கிரமிப்புகளுக்கு எந்த நோக்கமும் இல்லை என்ற நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை கண்காணித்து வருகிறோம். இதன்படி, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கழிவுநீர் கலக்கும் நிறுவனங்களை மூடி சீல் வைக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இனி வரும் புகார்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இந்நிகழ்ச்சியில் டாடா நிறுவனத்தின் தலைமை மனித வள அதிகாரி ஆதேஷ் கோயல், தலைமை டிஜிட்டல் அதிகாரி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: