தாம்பரம் அருகே இளஞ்ஜோடியை மிரட்டி கூகுள்பேவில் லஞ்சம் வாங்கிய 2 காவலர்கள் கைது

ஸ்ரீ பெரும்புதூர்: தாம்பரம் அருகே கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (30). இவருக்கும் இவரது உறவுக்கார பெண் ஒருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெறுவதற்கு நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், நிச்சயிக்கப்பட்ட பெண்ணும் கிருஷ்ணனும் காரில் பல்வேறு இடங்களுக்கு சுற்றி வந்துள்ளனர். பின்னர் நேற்றிரவு படப்பை அருகே ஆரம்பாக்கம் பகுதியில் காரை நிறுத்திவிட்டு, அதன் அருகே நின்றபடி பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியே ரோந்து வந்த மணிமங்கலம் காவல் நிலையத்தை சேர்ந்த 2 காவலர்கள் கிருஷ்ணனையும் இளம்பெண்ணையும் மிரட்டி, ரூ.5 ஆயிரத்தை லஞ்சமாக கேட்டுள்ளனர்.

இதனால் பயந்து போன கிருஷ்ணன், தனது செல்போனில் உள்ள கூகுள்பே செயலி மூலமாக மணிமங்கலம் காவல் நிலைய முதல்நிலை காவலரான மணிபாரதி (30) என்பவருக்கு ரூ.4 ஆயிரத்தை லஞ்சமாக அனுப்பியுள்ளார். பின்னர் இதுகுறித்து மணிமங்கலம் காவல் நிலையத்தில் கிருஷ்ணன் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், திருமணம் ஆகப்போகும் இளஞ்ஜோடியை மிரட்டி, கூகுள்பே மூலம் முதல்நிலை காவலர் மணிபாரதி (30), காவலர் அமிர்தராஜ் (34) ஆகிய இருவரும் லஞ்சமாக ரூ.4 ஆயிரத்தை பெற்றிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 2 காவலர்களையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: