திருச்சி: திருச்சியில் டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய கார் மோதி, நடைபாதையில் படுத்து தூங்கிய 3 பேர் இறந்தனர். திருச்சி காந்தி மார்க்கெட் பெரிய கம்மாள ெதருவை சேர்ந்தவர்கள் லெட்சுமி நாராயணன்(23), அஸ்வந்த்(21). அண்ணன், தம்பிகளான இவர்கள் இருவரும் நேற்று இரவு 11 மணியளவில் ரங்கம் அம்மா மண்டபத்தில் இருந்து ராஜகோபுரம் நோக்கி காரில் சென்றனர். காரை அஸ்வந்த் ஓட்டினார். கீதாபுரம் என்ற இடத்தில் வந்தபோது திடீரென காரின் முன் பக்க மற்றும் பின் பக்கத்தில் 2 டயர்கள் ஒரே நேரத்தில் வெடித்தன. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த நடைபாதையில் ஏறியது.
இதில் நடைபாதையில் படுத்து தூங்கிய 3 பேர் மீது கார் ஏறி, இறங்கியது. இதில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பிணமானார். மற்ற இருவரும் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். தகவலறிந்த திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து பலியானவர் சடலத்தை கைப்பற்றினர். மேலும் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.விபத்தில் பலியான 3 பேருக்கும் வயது 50க்கு மேல் இருக்கும். யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. அப்பகுதியில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்தவர்கள் என கூறப்படுகிறது. இது குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து லெட்சுமி நாராயணனையும், அஸ்வந்தையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து காரையும் பறிமுதல் செய்தனர். இறந்தவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்றும் விசாரணை நடந்து வருகிறது.