வீட்டுமனை தருவதாக கூறி 20 பேரிடம் ரூ.1.73 கோடி மோசடி: அண்ணன் தம்பி கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வீட்டு மனை வழங்குவதாக கூறி 20 பேரிடம் ரூ.1.73 கோடி மோசடியில் ஈடுபட்ட சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் பெரியகாட்டுபாளையத்தை சேர்ந்த மணி மகன்கள் வெங்கடேசன் (48), ராஜ்குமார் (45). இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை சேர்ந்த பஞ்சாட்சரம் என்ற விவசாயியிடம் இருந்து வீட்டுமனை அமைப்பதற்காக நிலத்தை விலை பேசி வாங்கியுள்ளனர். அதன்படி னிவாசா நகர் விரிவாக்கம் என்ற பெயரில் வீட்டுமனை போட்டுள்ளனர்.

இதில் கண்டாச்சிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் வீட்டு மனைக்காக பணத்தை கொடுத்துள்ளனர். முருகன் என்பவர் 2 வீட்டு மனைகளை பதிவு செய்து மொத்தம் ரூ.27.50 லட்சத்தில், முன்பணமாக ரூ.10 லட்சத்தை கட்டியுள்ளார். மீதமுள்ள ரூ.17.50 லட்சத்தை கிரயம் செய்த பிறகு கொடுப்பதாக கூறிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் முருகன் சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் சென்று மீதமுள்ள பணத்தை உடனே கொடுப்பதாகவும், 2 வீட்டு மனைகளை கிரயம் செய்து கொடுங்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் 2 வருடங்களாகியும் வீட்டு மனையை கிரயம் செய்து கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

இதேபோல், 20 பேரிடம் சுமார் ரூ.1.73 கோடி வரை பெற்றுக்கொண்டு வீட்டு மனைகளை கிரயம் செய்து கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. நிலத்தின் உரிமையாளர் பஞ்சாட்சரத்திடமும் வெறும் ரூ.10 லட்சம் மட்டும் கொடுத்துவிட்டு அவரையும் ஏமாற்றி உள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், வெங்கடேசன், அவரது சகோதரர் ராஜ்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்து திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி விழுப்புரம் கிளை சிறையில் அடைத்தன்.

Related Stories: