பாஜ நிர்வாகியை தாக்கிய வழக்கில் கைதான மாஜி அதிமுக எம்எல்ஏ மகன் உதவியாளர் சிறையிலடைப்பு

மதுரை: பாஜ முன்னாள் நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய மாஜி அதிமுக எம்எல்ஏ நீதிபதியின் மகன் மற்றும் உதவியாளரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியின் மாஜி அதிமுக எம்எல்ஏ நீதிபதி. அதிமுக ஒன்றிய செயலாளரான இவருக்கும், பாஜ முன்னாள் தேசிய பொதுக்குழு உறுப்பினரான போஸ் (65) என்பவருக்கும் இடையே கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்தது. இதுதொடர்பாக போஸ் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை முடிவில் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் மாஜி எம்எல்ஏ ஆஜராகி விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, கடந்த 5ம் தேதி உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் முன்னாள் எம்எல்ஏ நீதிபதி, அவரது மகன் இளஞ்செழியன், உதவியாளர் ராஜா ஆகியோர் ஆஜராகினர். விசாரணையை முடித்துவிட்டு செல்லும்போது அங்கு வந்த பாஜ மூத்த உறுப்பினர் போஸ் மீது இளஞ்செழியன், ராஜா ஆகியோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த போஸ், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தாக்குதல் தொடர்பாக போஸ் அளித்த புகாரின் அடிப்படையில் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார், இளஞ்செழியன், உதவியாளர் ராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையிலான தனிப்படையினர் நேற்று இருவரையும் கைது செய்தனர். உசிலம்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் விசாரணை கைதிகளாக 15 நாள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: