200 லிட்டர் பால் திருட்டு சம்பவம் நெல்லை ஆவினில் மேலாளர் உட்பட இருவர் சஸ்பெண்ட்

நெல்லை: நெல்லை கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மூலம் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தினமும் 40 ஆயிரம்  லிட்டர் பால் விநியோகம் நடந்து வருகிறது. நெல்லை ரெட்டியார்பட்டியிலுள்ள ஆவின் நிறுவனத்தில் இருந்து காலை, மாலை என இரு வேளைகளில் பதப்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு ரூட் வாரியாக ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்பி வைக்கப்படும். தற்போது நெல்லை மாவட்டத்தில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் ஆவின் நிறுவன பெண் அதிகாரி ஒருவர், கடந்த 9ம் தேதி இரவு பால் ஏற்றிச் செல்லும் வாகனத்தை நிறுத்தி  திடீர் சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வாகனத்தில் 200 லிட்டர் பால் கூடுதலாக ஏற்றிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகனத்தில் அனுப்ப வேண்டிய பாலை விட கூடுதலாக 200 லிட்டர் பால் திருடிக் கொண்டு சென்றது தெரிய வந்தது.

புகாரின்படி பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிந்து ஆவின் பால் திருட்டில் ஈடுபட்ட லோடுமேன் மேலப்பாளையத்தை சேர்ந்த மன்சூர், டெஸ்பேட்ச் கிளார்க் ஆசைதம்பி, பால் முகவரும் பால் வாகனங்களின் உரிமையாளருமான பாளையைச் சேர்ந்த ரமேஷ், உதவியாளர் அருண் ஆகிய 4  பேரை கைது செய்தனர். விசாரணையில், கடந்த ஓரிரு மாதங்களாக இதுபோன்று தினமும் 100 லிட்டர் முதல் 200 லிட்டர் பால் திருடப்பட்டுள்ளதாக தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இவ்வழக்கில் சந்தேகத்தின்  பேரில் இரு ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே  பால் திருட்டு தொடர்பாக, உதவி பொதுமேலாளர் (பண்ணை) ஜான் சுனிலை சஸ்பெண்ட் செய்து பொதுமேலாளர் தியானேஷ் பாபு உத்தரவிட்டு உள்ளார்.

Related Stories: