48 மணி நேரத்தில் ரூ.3.5 லட்சம் கோடி டெபாசிட் தொகை எடுத்த மக்கள் அமெரிக்காவின் சிலிக்கான் வங்கி திவால்: 2008க்குப் பிறகு மீண்டும் பொருளாதார மந்தநிலை அச்சம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவின் 16வது பெரிய வங்கி சிலிக்கான் வேலி. இந்த வங்கி பெரும்பாலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடன் வழங்கியது. தனது கடனில் 44 சதவீதத்தை வென்சர் அடிப்படையிலான தொழில்நுட்ப மற்றும் சுகாதார துறையை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழங்கி உள்ளது. 1983ல் தொடங்கப்பட்ட பராம்பரியமான இந்த வங்கி கடந்த 2021ம் ஆண்டு வரை ரூ.17 லட்சம் கோடி வரை சொத்து வைத்திருந்தது. அதன் பின் பணவீக்கம் காரணமாக இதன் வீழ்ச்சி தொடங்கியது.

கடன் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் பல நிறுவனங்கள் சிலிக்கான் வங்கியில் கடன் பெறுவதை தவிர்க்கத் தொடங்கின. நஷ்டத்தை ஈடுகட்ட பங்கு பத்திரங்களை விற்க வேண்டிய நிலைக்கு வந்தது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை இந்த வங்கி தனது நிதி இருப்பு நிலையை உயர்த்த ரூ.18,500 கோடி பங்கு விற்பனை மூலம் நிதி திரட்ட வேண்டிய கட்டத்தில் இருப்பதாக அறிவித்தது. மேலும், தனது மொத்த கடன் பத்திரங்களை ரூ.14,000 கோடி நஷ்டத்தில்  வேறு வழியின்றி விற்றிருப்பதாக அறிவித்தது.

இந்த அறிவிப்பு, வங்கியில் கணக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள் மத்தியில் பீதியை கிளப்பின. இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் ரூ.3.25 லட்சம் கோடி டெபாசிட் பணத்தை நிறுவனங்களும் பொதுமக்களும் வங்கியில் இருந்து எடுத்தனர். இதன் காரணமாக, கடந்த வியாழக்கிழமை பங்குச்சந்தையில் வங்கியின் பங்குகள் 69% வீழ்ச்சியை சந்தித்த நிலையில், வெள்ளிக்கிழமை சிலிக்கான் வங்கி திவாலானது. இந்த வங்கியை பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் தனது கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இந்த அமைப்பு வைப்புத் தொகை வைத்திருப்பவர்களின் பணத்தை சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்குவதாக அறிவித்துள்ளது. இது வெறும் அமெரிக்க வங்கியின் வீழ்ச்சி மட்டுமல்ல. கடந்த 2008ம் ஆண்டு உலகின் பல நாடுகளிலும் கடும் பொருளாதார மந்த நிலை நிலவியது. அப்போது, அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான லேமன் பிரதர்ஸ் திவாலானது. இதைத் தொடர்ந்து பொருளாதார பெருமந்தம் பல நாடுகளையும் ஆட்டிப்படைத்தது. வேலைவாய்ப்புகள் பறிபோகின. அமெரிக்காவின் ஜிடிபி மைனசில் சென்றது. பின்னர் அமெரிக்க அரசு தலையிட்டு, பல நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்து மந்தநிலைக்கு தீர்வு கண்டது.

அதே போல, கொரோனா பாதிப்புக்குப் பிறகு பல உலக நாடுகளும் பொருளாதார ரீதியாக நிச்சயமற்ற சூழலில் உள்ளன. வளர்ந்த நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட நிலையில் அமெரிக்காவின் பெரிய வங்கி திவாலாகி இருப்பது 2008 போல மீண்டும் பொருளாதார பெருமந்தத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  மஸ்க் வாங்கப் போகிறாரா? இதற்கிடையே, ரேஸர் நிறுவன சிஇஓ மின் லியங்க் டன் தனது டிவிட்டர் பதிவில், ‘‘சிலிக்கான் வங்கியை டிவிட்டர் வாங்கி, டிஜிட்டல் வங்கி ஆக மாற்றலாமே’’ என குறிப்பிட்டுள்ளார். அதற்கு டிவிட்டர் உரிமையாளரான தொழிலதிபர் எலான் மஸ்க், ‘‘அதைப் பற்றி யோசிக்கிறேன்’’ என பதிலளித்துள்ளார். டிவிட்டரை வாங்கிய பிறகு மஸ்க் அந்நிறுவனத்தை படாதபாடு படுத்தி வரும் நிலையில் திவாலான வங்கியை வாங்கினால் என்னென்ன செய்வார் என சமூக ஊடகங்களில் பலர் கிண்டலடித்து வருகின்றனர்.

Related Stories: